தமிழக போக்குவரத்து அமைப்பு
போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
1. சாலைப்போக்குவரத்து,
2. இரயில் போக்குவரத்து,
3. விமானப் போக்குவரத்து,
4, கப்பல் போக்குவரத்து
ஆகிய நான்கு வகையான போக்குவரத்து வசதிகளையும் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
சாலைப் போக்குவரத்து
தமிழகத்தில் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாலைப் போக்குவரத்து ஆகும். தமிழக சாலைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
1. தேசிய நெடுஞ்சாலைகள்
2. மாநில நெடுஞ்சாலைகள்
3.மாவட்டச் சாலைகள்
4.கிராமச் சாலைகள்
தேசியச் சாலைகள் மாநிலங்களை இணைக்கவும், மாவட்டச் சாலைகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் தார் சாலைகள் போடப்பட்டு நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 24 தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன, அவை
4500 கி.மீ தொலைதூரத்தை இணைக்கின்றன. 2010 - மார்ச் 30 நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த சாலைகளின் நீளம் 1,99,040 கி.மீ ஆகும். இந்திய அரசாங்கம் முனைந்து உருவாக்கிய தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் முடிவிடமாக தமிழ்நாடு விளங்குகிறது.
வங்காளவிரிகுடா கரையோர பகுதியில் சென்னையையும் கடலூரையும் பாண்டிச்சேரி வழியாக இணைக்கும் கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது கிழக்கு கடற்கரைச்சாலை சிதம்பரம், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வரை விரிவாக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கார சாலைத்திட்டம் தமிழ்நாட்டில் 1232 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பொதுப் போக்குவரத்து திட்டம் (Public Transport System) திறம்பட செயல்படுத்தப்படுகின்றது.
அரசியல் தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக் கழகங்கள் 1998-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயருடன் இயங்குகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாட்டில் பொதுமக்கள் போக்குவரத்திற்காக பேருந்துகளை இயக்குகிறது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகமாகும்.
இது 6 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. கோயம்புத்தூர் கோட்டம்
2. விழுப்புரம் கோட்டம்
3. கும்பகோணம் கோட்டம்
4. சேலம் கோட்டம்
5. மதுரை கோட்டம்
6. திருநெல்வேலி கோட்டம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) (250 கி.மீ தூரத்திற்கும் மேற்பட்ட) நீண்ட தூர பயணத்திற்கான விரைவுப் பேருந்துகளை இயக்குகிறது.
1946-இல் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறையானது 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை Highways and Minor ports Department (HMPD) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த வாகன போக்குவரத்தில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 83.9 விழுக்காடாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2007-08 இல் 100.64 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 64 போக்குவரத்து வாகன மண்டலங்கள் உள்ளன. சாலைப்போக்குவரத்து அலுவலக மையங்களில், சென்னை அதிகபட்சமாக 61 மையங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகும்.
தேசிய நெடுஞ்சாலையின் பெயர்
NH 4 → சென்னை முதல் மும்பை வரை
NH 5 → சென்னை முதல் ஜர்போகாரியா (ஒரிசா) வரை
NH 7 → கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை
NH 7A → திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை
NH 45 → சென்னை முதல் தேனி வரை
NH 45A → விழுப்புரம் முதல் பாண்டிச்சேரி வரை
NH 45B → திருச்சி முதல் தூத்துக்குடி வரை
NH 45C → விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை
NH 46 → கிருஷ்ணகிரி முதல் இராணிப்பேட்டை வரை
NH 47 → சேலம் முதல் கன்னியாகுமரி வரை
NH 47 B → நாகர்கோயில் முதல் காவல் கிணறு வரை
NH 49 → மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
NH 67 → நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை
NH 207 → ஒசூர் முதல் துபாஷ்பேட் (கர்நாடகா) வரை
NH 209 → வேடசந்தூர் (திண்டுக்கல்) முதல் பெங்களுரு வரை
NH 205 → சென்னை முதல் அனந்த்பூர் வரை
NH 219 → கிருஷ்ணகிரி முதல் மதனப்பள்ளி வரை
NH 234 → மங்களூர் முதல் விழுப்புரம் வரை
NH 208 → மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலம்
முதல் கேரளாவின் கொல்லம் வரை
NH 220 → கொல்லம் முதல் தேனி வரை
தபால் தந்தித் துறை :
தமிழ்நாட்டில் நான்கு அஞ்சல் மண்டலங்கள் உள்ளன.
சென்னை - சென்னை
கோயம்புத்தூர் - மேற்கு மண்டலம்
திருச்சி - மத்திய மண்டலம்
மதுரை - தெற்கு மண்டலம்
தமிழ்நாட்டிலுள்ள அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை = 12,115.
அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை = 3,504.
தொலைபேசி இணைப்பகங்கள் = 2,408
தொலைபேசி வாடிக்கையாளர்கள் = 33,46,906