தமிழக இரயில் போக்குவரத்து
இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றான தெற்கு இரயில்வே மண்டலம், தமிழகத்தின் இரயில் போக்குவரத்தை சிறப்பாக நிர்வகிக்கின்றது.
தமிழ்நாட்டில் 5952கி.மீ(3698 மைல்கள்) தூரத்திற்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 536 இரயில் நிலையங்கள் உள்ளன.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தில் 6 கோட்டங்கள் (Division) உள்ளன. இதில் சேலம் கோட்டம் 2007-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
தென்னக இரயில்வேயின் 6 கோட்டங்கள்
1. சென்னை
2. திருச்சி
3. மதுரை
4. பாலக்காடு
5. திருவனந்தபுரம்
6. சேலம்
இரயில் பாதைகள் அகலத்தின் அடிப்படையில் அகலப் பாதை, மீட்டர் பாதை மற்றும் குறுகியப் பாதை என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. அகலப்பாதை (Broad gauge) - 1.676 மீட்டர்
2. மீட்டர் பாதை (Meter gauge) - 1 மீட்டர்
3.குறுகியபாதை (Narrow gauge) 0.768 மீட்டர்
சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் போன்றவை மாநிலத்தில் உள்ள முக்கிய இரயில்வே சந்திப்புகளாகும். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய இரண்டு பெரிய இரயில் நிலையங்கள் சென்னையில் உள்ளன.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து பல்வேறு வெளி மாநில நகரங்களுக்கும், எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தெற்குப் பகுதி நகரங்களுக்கும் இரயில் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தெற்கு இரயில்வே 1951-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
சென்னை நகர புறநகர் இரயில் போக்குவரத்து மூன்று முக்கிய வழித்தடங்களில் சிறப்பாக செயல்படுகிறது. அவை,
1. சென்னை - அரக்கோணம் இணைப்பு
2. சென்னை - செங்கல்பட்டு இணைப்பு மற்றும்
கடற்கரை வேளச்சேரி அதிவேக இரயில் போக்குவரத்து திட்டம் (MRTS).
பறக்கும் ரயில்
விரைவுப் போக்குவரத்து தொடருந்து திட்டம் (Chennai Mass Rapid Transit System - MRTS) என்பது சென்னையில் உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் இரயில் சேவையைக் குறிக்கும்.
1985-ஆம் ஆண்டு பறக்கும் தொடருந்து திட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. 1991-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, முதல்கட்ட பணியானது 1997-ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
இரண்டாம் கட்டப்பணியானது 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007-ஆம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
சென்னை கடற்கரை முதல், வேளச்சேரி வரையிலான 24.715 கி.மீ. வழித்தடத்தில் மொத்தம் 21 இரயில் நிலையங்கள் உள்ளன. இது அகலப்பாதை வழித்தடமாகும். இதன் உரிமையாளர் மற்றும் இயக்குனர் தென்னக இரயில்வேயாகும்.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் விரைவு இரயில் திட்டம்தான் "சென்னை மெட்ரோ இரயில் திட்டம்' ஆகும்.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக "சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்'" என்ற சிறப்பு பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
வழித்தடம் -1
முதல் வழித்தடமானது வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரையிலான 23.1 கி.மீ. நீளம் கொண்டது.
இதில் வண்ணாரப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 14.3 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள 8.8 கி.மீ பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும்.
வழித்தடம் - II
இரண்டாவது வழித்தடமானது சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை மொத்தம் 22 கி.மீ நீளம் கொண்டது.
இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலை வரை 9.7 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகவும் மீதமுள்ள 12.3 கி.மீ பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைக்கப்படவுள்ளது.
ஆக இரண்டு வழித்தடங்களையும் சேர்த்து மெட்ரோ இரயில் பாதையின் மொத்த நீளம் 45.1 கி.மீ ஆகும். இதில் 24 கி.மீ சுரங்கப்பாதையாகவும், 21 கி.மீ தூரம் உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும்.
இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.14,600 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 41 சதவீத தொகையை மாநில, மத்திய அரசுகள் கூட்டமாக பகிர்ந்து கொள்ளும்.
மீதி 59 சதவீகிதம் ஜப்பான் அரசின் சலுகையிலான, அரசுசார் மேம்பாட்டு நிதி உதவி கடனாக, ஜப்பானின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பிடம் (Japan International Co-operation Agency - JICA) இருந்து பெறப்படும்.
இத்திட்டப் பணிகள் யாவும் 2014-15 நிதியாண்டிற்குள் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் இரயில்கள் :
1. கிரான்ட் டிரங் எக்ஸ்பிரஸ் - சென்னை - புதுடெல்லி
2. சார்மினார் எக்ஸ்பிரஸ் - சென்னை - ஹைதராபாத்
3. அந்தமான் எக்ஸ்பிரஸ் - சென்னை - ஜம்முதாவி
4. நவஜீவின் எக்ஸ்பிரஸ் - சென்னை - அகமதாபாத்
5. பினாகினி எக்ஸ்பிரஸ் - சென்னை - விஜயவாடா
6. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் - சென்னை - ஹௌரா
7. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூரு
8. லால்பாக் எக்ஸ்பிரஸ் - சென்னை - பெங்களூரு
9. காவேரி எக்ஸ்பிரஸ் - சென்னை - மைசூர்
10. வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் - சென்னை - மங்களூர்
11. சிர்கார் எக்ஸ்பிரஸ் - சென்னை - காகிநாடா
12. கருடாத்திரி எக்ஸ்பிரஸ் - சென்னை - திருப்பதி
13. சப்தகிரி எக்ஸ்பிரஸ் - சென்னை - திருப்பதி
14. கோவை எக்ஸ்பிரஸ் - சென்னை - கோவை
15. சேரன் எக்ஸ்பிரஸ் சென்னை - கோவை
16. ஏலகிரி எக்ஸ்பிரஸ் - சென்னை - ஜோலார்பேட்டை
17. நீலகிரி எக்ஸ்பிரஸ் - சென்னை - மேட்டுப்பாளையம்
18. ஏற்காடு எக்ஸ்பிரஸ் - சென்னை - ஈரோடு
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் இரயில்கள்:
பொதிகை எக்ஸ்பிரஸ் - சென்னை - தென்காசி
வைகை எக்ஸ்பிரஸ் - சென்னை - மதுரை
பாண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னை - மதுரை
பல்லவன் எக்ஸ்பிரஸ் - சென்னை - திருச்சி
ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் - சென்னை - திருச்சி
நெல்லை எக்ஸ்பிரஸ் - சென்னை - திருநெல்வேலி
முத்துநகர் எக்ஸ்பிரஸ் - சென்னை - தூத்துக்குடி
சேது எக்ஸ்பிரஸ் - சென்னை - இராமேஸ்வரம்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் - சென்னை - திருவனந்தபுரம்
கொங்கு எக்ஸ்பிரஸ் - கோவை - நிஜாமுதீன்
திருக்குறள் எக்ஸ்பிரஸ் - சென்னை - நிஜாமுதீன்
விவேக் எக்ஸ்பிரஸ் - கன்னியாகுமரி - திப்ருகர் (அசாம்)
விவேக் எக்ஸ்பிரஸ் :
இந்தியாவின் மிக நீண்டதூர ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ், உலகின் 8-ஆவது நீண்டதூர ரயில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இது தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் வரையிலான 4287 கி.மீ. தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்கின்றது.
இது அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக பயணிக்கிறது.
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2011-12 இரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய இரயில்வே அமைச்சர் செல்வி மம்தா பானர்ஜியால் அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிக நீண்ட தூர ரயிலாக இருந்தது.