தமிழக கல்வி முறை

1. ஆரம்ப தொடக்கக் கல்வி

தொடக்கக்கல்வி முன்னேற்றத்திற்கு தமிழ்நாட்டில் கு.காமராசரே முக்கிய காரணமாவார். தொடக்கக்கல்வியில் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்கும், இடைநிற்றலை தவிர்ப்பதற்கும் மற்றும் கல்வியில் முழு முன்னேற்றம் அடையவும் தமிழக அரசு சத்துணவு மற்றும் இலவச பேருந்து வசதி ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்கும், இடைநிற்றலை தவிர்ப்பதற்கும் மற்றும் கல்வியில் முழு முன்னேற்றம் அடையவும் தமிழக அரசு சத்துணவு மற்றும் இலவச பேருந்து வசதி ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

மேலும் தொடக்கக் கல்வி முன்னேற்றத்திர்க்காக தமிழ்நாடு அரசு மைய அரசுடன் இணைந்து அனைவருக்கும் கல்வி திட்டத்தை (Sarva Siksha Abhiyan) செயல்படுத்தி வருகிறது.

2. இடைநிலைக்கல்வி

தொடக்கக்கல்வியையும் உயர்கல்வியையும் இணைக்கும் பாலமாக இடைநிலைக் கல்வி விளங்குகின்றது.

வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஏதுவாக கணினிக்கல்வியும் தொழிற்கல்வியும் (Vocational Education) வழங்கப்பட்டு வருகின்றது.

இடைநிலைக் கல்வியை அனைவரும் பெறுவதற்காகவும் அனைத்து மாணவர்களையும் சமுதாய பொறுப்புணர்வுடன் பொருளாதார நிலையில் உயர்வடையச் செய்யவும், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (Rastriya Madhyamic Siksha Abyan) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

3. ஆசிரியர் கல்வி

தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training) செயல்பட்டு வருகின்றது.

4. உயர்கல்வி

உயர்கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. நலிவுற்ற, கிராமப்புற மாணவர்களை முழுமையாக கல்லூரிகளில் சேர்த்து அவர்கள் தொடர்ந்து கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குகின்றது.

அரசின் முக்கிய நோக்கமே 11.72 சதவீதமாக உள்ள உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 25 சதவீதமாக உயர்த்துதல் ஆகும்.

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி என்பது தமிழ்நாட்டில் 2010-11 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை செயல்பட்டு வந்த (4 தொடக்கக்கல்வி அமைப்புகளான) மாநில அரசு கல்வி முறை, மெட்ரிகுலேசன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, மற்றும் ஓரியண்டல் கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளையும் ஒன்றாக இணைத்து, அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை வழங்கும் நோக்கில் சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இக்கல்வி முறையையைக் கொண்டுவருவதற்காக தமிழக அரசு 2007-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு தனது பரிந்துரையை ஜூலை 2007-இல் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முன்னாள் மாநில திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவும் தனது பரிந்துரையை 2008-இல் அரசிடம் சமர்ப்பித்தது. இந்த இரண்டு பரிந்துரைகளையும் விவாதித்து தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-இல் அரசு முடிவு செய்தது.

2009-ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இதற்கான அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தார். இந்த அவசரச் சட்டத்திற்கு பதிலாக சமச்சீர் கல்வி சட்ட மசோதா 2010 ஜனவரி 9 -இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

விரிவான விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் 2010 ஜனவரி 11 அன்று நிறைவேற்றப்பட்டு "தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்விமுறைச் சட்டம் - 2010 ஆக அறிவிக்கப்பட்டது.  இச்சட்டத்தின்படி சமச்சீர் கல்வித்திட்டம் 2010-11 கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டது.

இரண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் 2011-12 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளிக் கல்விக்கான மாநில பொதுக்கல்வி வாரியம் ஒன்று அமைக்கப்படுகிறது.

இந்த பொதுக்கல்வி வாரியம் வகுப்பு வாரியாக பொதுப்பாடதிட்டம் உருவாக்குதல், தேர்வுமுறைகளை உருவாக்குதல், சான்றிதழ் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்தல், பள்ளிக் கல்வித் தரத்தை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளித்தல் ஆகிய பணிகளைச் செய்யும்.

இந்த சமச்சீர் கல்வி திட்டப்படி இனி அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி ஒரே தரமான, சமமான கல்வி கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

Previous Post Next Post