தமிழக மாவட்டங்கள் உருவான வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. 1872-இல் மெட்ராஸ் மாகாணத்தில் 21 மாவட்டங்களும் 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன. 1881-இல் 23 மாவட்டங்களும், 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன. 1941- இல் 25 மாவட்டங்களும், 5 மன்னராட்சிப் பகுதிகளும் இருந்தன.
சுதந்திரத்திற்கு பிறகு 1951 இல் மெட்ராஸ் மாநிலத்தில் 26 மாவட்டங்கள் இருந்தன. மார்ச் 1956 - இல் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது நடைபெற்ற விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார் ஆவார்.
செப்டம்பர் 6, 1956 - இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் (அரசியல் சாசன ஏழாம் திருத்தச் சட்டம்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நவம்பர் 1, 1956 முதல் அமலுக்கு வந்தது.
1956 - இல் இந்திய அரசு இயற்றிய மாநில மறு சீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் 14 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் உருவாக்கப்பட்டன.
இதன்படி 1956 - ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்மொழி பேசும் மாநிலமாக புதிய "மெட்ராஸ் மாநிலம்" உருவானது. இதனால் 1961 - இல் மெட்ராஸ் மாநிலத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகக் குறைந்தது.
1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் மெட்ராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' எனப் பெயர்மாற்றம் செய்யும் மசோதா மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதுவே மெட்ராஸ் மாநில (பெயர் மாற்ற) சட்டம், 1968 எனப்பட்டது.
இதன்படி அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது 1969 - ஆம் ஆண்டு ஜனவரி 14 - ஆம் நாள் "தமிழ்நாடு” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1971-இல் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 14 ஆகும். இதுவே 1981-இல் 16 ஆகவும், 1991 - இல் 21 ஆகவும், 2001- இல் 30 ஆகவும் உயர்ந்தது. 2008 - இல் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
அதற்குப் பின் நவம்பர் 2019- இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் (33).
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் (36).
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன. இப்புதிய மாவட்டங்களுக்கு 2019 நவம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் 2020 மார்ச் 24 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் (38) உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. (மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக 2020 மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட (ஆண்டு) மாவட்டங்கள் :
கன்னியாகுமரி - 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது
தர்மபுரி - 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
புதுக்கோட்டை - 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
காஞ்சிபுரம் - 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
ஈரோடு - 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சிவகங்கை - 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விருதுநகர் - 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திண்டுக்கல் - 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தூத்துக்குடி - 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருவண்ணாமலை - 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
நாகப்பட்டினம் - 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கடலூர் - 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விழுப்புரம் - 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கரூர் - 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பெரம்பலூர் - 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
நாமக்கல் - 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருவாரூர் - 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தேனி - 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் - 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி - 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அரியலூர் - 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருப்பூர் - 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தென்காசி - 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி - 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருப்பத்தூர் - 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இராணிப்பேட்டை - 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
செங்கல்பட்டு - 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மயிலாடுதுறை - 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.