தமிழ்நாட்டின் மண்வளம் (Soils of Tamil Nadu)
தமிழ்நாட்டில் காணப்படும் மண் வகைகளை செம்மண், வண்டல் மண், கரிசல் மண், துருக்கல் மண், உவர்மண் என ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர்.
செம்மண் (laterite soil)
தமிழகத்தில் மிக அதிகளவில் காணப்படும் மண்வகை செம்மண்ணாகும். அதனையடுத்து கரிசல் மண், களிமண், வண்டல் மண் போன்றவை காணப்படுகின்றன.
செம்மண் சிவப்பு நிறமாக இருப்பதற்கு காரணம் அதிலுள்ள இரும்பு ஆக்சைடாகும். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. நைட்ரஜன், மக்னீசியம், பாஸ்பரஸ், உயிர்ச்சத்துக்கள் போன்றவை குறைவாக காணப்படுகின்றன. இது பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இம்மண் நீரை வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆனால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை குறைவு.
நீர்ப்பாசன வசதிக்கேற்ப நெல், கரும்பு, நிலக்கடலை, எள், கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
கரிசல் மண் (Black soil)
எரிமலைப் பாறைக் குழம்புகள் சிதைவதால் கரிசல் மண் உண்டாகிறது. கரிசல் மண்ணின் துகள்களில் பெரும்பகுதி களி மண்ணும் வண்டலும் சேர்ந்ததாகும். இது அதிக ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
இது கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுகிறது. பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வட்டங்களில் ஜிப்சம் கலந்த கருப்பு மண் காணப்படுகிறது.
கரிசல் மண்ணில் அலுமினியம், சுண்ணாம்பு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் நைட்ரஜன் சத்து குறைவு. பருத்தி விளைச்சலுக்கு இம்மண்ணே சிறந்ததாகும்.
வண்டல் மண் (alluvial soil)
அனைத்து மண் வகைகளிலும் சிறந்தது வண்டல் மண்ணாகும். ஏனெனில், இம்மண்ணில்தான் பயிர்கள் செழிப்பாகவும் நல்ல மகசூல் தருபவையாகவும் இருக்கின்றன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வண்டல் மண் காணப்படுகிறது. இம்மண்ணில் சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் நைட்ரஜன், மற்றும் பாஸ்பரஸ் குறைவாகக் காணப்படுகிறது.
இம்மண்ணில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
துருக்கல் மண் (Rusty soil)
இது திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிகச்சிறு பகுதிகளில் காணப்படுகின்றது. இம்மண்ணில் இரும்பு ஆக்ஸைடு கலந்து காணப்படுகிறது. அதிக மழை பொழிவும் வறண்ட வெப்ப காலமும் உள்ள உயரமான பகுதிகளில் இம்மண் உருவாகின்றது.
இம்மண் உயரமான பகுதிகளில் உருவாகும் மண் மற்றும் தாழ்ந்த பகுதிகளில் உருவாகும் மண் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. தாழ்ந்த பகுதிகளில் வேளாண்மையின் கீழ் உள்ள மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகம்.
அதிக மழை விழும் பகுதிகளில், அதிகமான சத்துக் குறைதலுக்கு (Leaching) இம்மண் உள்ளாகின்றது. இதில் நெல், இஞ்சி, மிளகு மற்றும் வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன.
உவர்மண் (Saline Soil)
கடற்கரை ஓரங்களில் மிகக் குறைந்த அளவில் உவர்மண் காணப்படுகிறது. வடிகால் வசதி குறைவாகவும், ஆவியாதல் அதிகமாகவும் நடைபெறும் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
மலைமண் (Mountain soil)
பொதுவாக மலைகள் மற்றும் குன்றுகள் உள்ள பகுதிகளில் இவ்வகை மண் காணப்படுகிறது. தழைச்சத்தும், இரும்புச் சத்தும் இம்மண்ணில் அதிகமாக இருக்கும். நீலகிரி மாவட்டத்திலும், சேர்வராயன் மலை, ஏலகிரி மலை மற்றும் ஆனை மலைப் பகுதிகளிலும் இம்மண் காணப்படுகிறது.
இம்மண் காப்பி, தேயிலை, இரப்பர், ஏலக்காய் போன்ற வாசனைப் பயிர்களுக்கு ஏற்றதாகும்.
சதுப்பு மண் (Swamp soil)
சேறும் சகதியும் கலந்து காணப்படும் மண் சதுப்பு நில மண் ஆகும். கழிமுகப்பகுதிகளில் மட்டுமே இவ்வகை மண் காணப்படுகிறது. இராமேஸ்வரம், கடலூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சதுப்பு மண் காணப்படுகிறது.
களிமண் (Clay Soil)
அனைத்து மண் வகைகளுள் மிகவும் வலிமையானாதும், பிசுபிசுப்பும் ஒட்டுந்தன்மையும் மிகுதியாக உடையதும் களிமண் ஆகும்.
செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், மன்னார்குடி, திருச்சி, கரூர், உசிலம்பட்டி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் களிமண் காணப்படுகிறது. சோளம் களிமண் நிலத்திற்கு ஏற்ற பயிர் ஆகும்.
குறிப்பு :
ஒரு செ.மீ. மண் உற்பத்தியாவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டின் மண் வகைகள் மற்றும் பரவல்
மண் வகை மற்றும் மாவட்டங்கள்
1. வண்டல் மண் - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி.
2. கரிசல் மண் - கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி.
3. செம்மண் - சிவகங்கை, இராமநாதபுரம்.
4. துருக்கல் மண் - காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சியின் மலை உச்சி.
5. உவர் மண் - வேதாரண்யத்தின் பெரும்பான்மைப் பகுதி, சோழமண்டலக் கடற்கரை மற்றும் ஒவ்வொரு கடலோர மாவட்டங்களில் சுமார் 10.கி.மீ. பரப்பிலான கடலோரப் பகுதி.
தமிழ்நாட்டின் நிலப்பயன்பாடு
வகைப்பாடு மற்றும் பரப்பு/ ஹெக்டேர் %
காடுகள் = பரப்பு - 21,10,703 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 16.2%
உபயோகமற்ற நிலங்கள் = பரப்பு - 5,03,255 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 3.9%
விவசாயம் அல்லாத நிலங்கள் = பரப்பு - 21,38,679 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 16.4%
நிரந்தர மேய்ச்சல் நிலங்கள் = பரப்பு - 1,10,309 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 0.8%
உபயோகத்திலுள்ள நிலங்கள் = பரப்பு - 3,68,661 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 2.8%
நிகர விளை நிலத்தோடு சேர்க்கப்படாத மரங்கள், பயிர்கள், மற்றும் புதர்ச் செடிகள் = பரப்பு - 2,74,351 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 2.1%
நடப்பு தரிசு நிலம் = பரப்பு - 7,58,840 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 5.8%
மற்ற தரிசு நிலம் = பரப்பு - 15,18,008 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 11.7%
நிகர விளை நிலம் = பரப்பு - 52,43,839 ஹெக்டேர் - தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் - 40.3
தமிழ்நாட்டின் மொத்த புவியியல் பரப்பு - 1,30,26,645 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு - 100%