தமிழகத்தில் ஆறுகள் உற்பத்தியாகும் இடம்
தமிழ்நாட்டின் ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழையினால் உருவாகின்றன. இவைகள் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
பாலாறு, பொன்னியாறு, செய்யாறு ஆகியவை தமிழகத்தின் வடக்கில் பாய்கின்றன. காவிரி வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய இரு பருவங்களிலும் மழையினைப் பெற்று கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ் நாட்டில் பாய்கின்றது.
தமிழக ஆறுகளின் பட்டியல்
மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு), மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு), திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு), மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு), பாம்பாறு (வட தமிழ்நாடு), பாம்பாறு (தென் தமிழ்நாடு), மோயாறு, முல்லை ஆறு,
குதிரையாறு(அமராவதியின் துணையாறு), குழித்துறை ஆறு(அமராவதியின் துணையாறு), நங்காஞ்சி ஆறு (குழித்துறை தாமிரபரணி ஆறு கன்னியாகுமரி மாவட்டம்), கெடிலம், கோமுகி ஆறு, கோதையாறு (கன்னியாகுமரி), மலட்டாறு, மஞ்சளாறு ( வைகையின் துணையாறு ),
உப்பாறு (வைகையின் துணையாறு ), வைகை ஆறு (190 கி.மீ), கிருதுமால் ஆறு, வைப்பாறு (வைகையின் துணையாறு ), வெண்ணாறு, வெட்டாறு, சனத்குமார நதி- காவிரியின் துணையாறு, மார்கண்ட நதி- தென்பெண்ணையாற்றின் துணையாறு, வாணியாறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு,
நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பாலாறு (காவிரியின் துணை ஆறு), பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா நதி, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு (400 கி.மீ), கமண்டல நாகநதி ஆறு, தாமிரபரணி ஆறு, நீவா ஆறு (பாலாறின் தூணையாறு),
அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, ஓடம்போக்கி ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு, சின்னாறு [[மாரண்டஹள்ளி]] காவிரி துணையாறு, செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு, கபினி ஆறு, கடனாநதி - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கோரையாறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு,
காவிரிக்கு தெற்கே வைப்பார், வைகை, தாமிரபரணி போன்ற முக்கிய நதிகள் பாய்கின்றன. தாமிரபரணி நதி திருநெல்வேலி மாவட்டத்தை வளமாக்குகிறது. பாபநாசம், மணிமுத்தாறு போன்ற நதித் திட்டங்களால் கால்வாய்ப் பாசனம் பெருமளவில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி ஆறு :
காவிரி தமிழகத்தின் மிக நீளமான ஆறு ஆகும். இதன் நீளம் 760 கி.மீ. இது கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள குடகு மலையில், தலைக்காவேரி என்ற இடத்தில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கிப் பாய்கின்றது.
கர்நாடக மாநிலம் திப்பூரில் ஹேமாவதி என்ற சிற்றாறும், பைரபூர் என்ற இடத்தில் இலட்சுமண தீர்த்தம் என்ற சிற்றாறும் இதனுடன் இணைகின்றன.
இவ்வாறு பெருகி வரும் நீர் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறது. இந்த அணைதான் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 12 அணைகளில் மிகப் பெரியதாகும்.
மைசூர் பீபூடமியைக் கடந்து சிவ சமுத்திரம் நீர் வீழ்ச்சிக்கு சற்று கீழே, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனகல் வழியாக காவிரி தமிழகத்திற்குள் நுழைகிறது.
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியாகும். இங்கு 1902-ஆம் ஆண்டு நீர்மின் நிலையம் நிறுவப்பட்டது. கர்நாடக மாநிலத்திலுள்ள சிவசமுத்திரம் அருவியும், தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
காவிரியின் போக்கில் கிழக்கில் கீத மலைத்தொடரும், மேற்கில் பால மலைத் தொடரும் செல்கின்றன. இவ்விரு மலைகளும் நெருங்குமிடத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து வெளியேறும் காவிரி பவானி, ஈரோடு பகுதிகளில் பாய்ந்து பின்னர் தென்கிழக்கில் திசை மாறி திருச்சி மாவட்டத்தில் கிழக்கு நோக்கி ஓடுகிறது. கரூருக்கு அருகில் அமராவதி மற்றும் சில சிற்றாறுகள் காவிரியுடன் இணைகின்றன.
திருச்சி மாவட்டத்தில் காவிரி அகன்ற காவிரியாக ஓடுகிறது. திருச்சிக்கு மேற்கே 15 கி.மீ. தூரத்தில் இலமனூர் என்ற இடத்தில் கொள்ளிடம் என்ற கிளையாறு பிரிகிறது. கொள்ளிடத்தின் குறுக்கே மேலணை கட்டப்பட்டுள்ளது.
தென்கிளை காவிரியாகவும், வடகிளை கொள்ளிடமாகவும் பிரிந்து ஓடும் இவை, 27 கி.மீ. அப்பால், உள்ளாறு என்ற வாய்க்காலால் இணைக்கப்படுகிறது. உள்ளாற்றின் குறுக்கே வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லணை கரிகாலச் சோழனால் கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி பல சிற்றாறுகளாகப் பிரிகிறது. அவற்றுள் முக்கியமானது வெண்ணாறு.
தஞ்சை மாவட்டத்தின் செழிப்பிற்கு காரணமான பல்வேறு சிற்றாறுகள் வெண்ணாற்றிலிருந்து பிரிகின்றன. திருவையாறு, கும்பகோணம் ஊர்களைத் தழுவி மயிலாடுதுறை வரும் போது காவிரியின் அகலம் குறுகுகின்றது.
இறுதியில் தரங்கம்பாடிக்கு 16 கி.மீ. வடக்கே காவிரி பூம்பட்டினத்தில் வங்கக்கடலோடு கலக்கிறது. காவிரியும் கொள்ளிடம் நதியும் திருச்சிக்கு கிழக்கே இணைந்து ஸ்ரீரங்கம் என்ற ஆற்றுத் தீவை தோற்றுவிக்கின்றன.
காவிரி நதி நீர்ப்பிரச்சனை :
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்சனையாகும்.
1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இருவேறு முரண்பட்ட ஒப்பந்தங்களே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு 1990-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயத்தை அமைத்தது.
3 உறுப்பினர் கொண்ட இத்தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி நியமிக்கப்பட்டார். இத்தீர்ப்பாயம் டெல்லியில் அமைக்கப்பட்டது.
நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக, நடுவர் மன்ற தீர்ப்பாயம் தனது இடைக்கால தீர்ப்பை 1991, ஜூன் 25-இல் வழங்கியது. இந்தத் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் டிசம்பர் 11, 1991 -இல் வெளியிடப்பட்டது.
நடுவர் மன்றர் தீர்ப்பாய முடிவின்படி, பிரதமர் தலைமையில் 1997 - ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் சம்பந்தப்பட்ட ஆணையம் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும் இந்த ஆணையத்துக்கு உதவிடும் வகையில் காவிரி கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியின் தலைவராக மத்திய நீர்வளத்துறையின் செயலாளரும், தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த தலைமைச் செயலர் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
காவிரி நதிநீர் ஆணையமும், காவிரி கண்காணிப்பு கமிட்டியும் பெரிய அளவில் செயல்பாடுகளை காட்டாத நிலையில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியிட்டது.
இதன்படி தமிழகம் ஆண்டுக்கு 419 பில்லியன் கனஅடி (12கி.மீ) நீரும், கர்நாடகா 270 பில்லியன் கனஅடி நீரும், கேரளா 30 பில்லியன் கன அடி நீரும், புதுச்சேரி 7 பில்லியன் கன அடி நீரும் பெற வேண்டும்.
ஆனால் தற்பொழுது கர்நாடகா தமிழகத்திற்கு வழங்கி வரும் நீரின் அளவானது ஆண்டுக்கு 192 பில்லியன் கன அடியாகும்.
தென் பெண்ணை :
இது கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்கத்திற்கு தென்கிழக்கில் சென்னராயன் பேட்டா என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் கடலூருக்கு அருகில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.
தமிழகத்தில் இதன் நீளம் 320 கி.மீ. ஆகும். கிருஷ்ணகிரிக்கு அருகிலும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் என்னுமிடத்திலும் இதன் மீது அணைகள் கட்டப்பட்டுள்ளன.
பாலாறு :
இது கர்நாடகா மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி துர்கம் என்ற இடத்தில் உற்பத்தியாகிறது.
348 கி.மீ. நீளம் கொண்ட இந்நதி கர்நாடகத்தில் 93 கி.மீ. தூரமும், ஆந்திராவில் 33 கி.மீ. தூரமும், தமிழகத்தில் 222 கி.மீ. தூரமும் ஓடி சென்னைக்கு தெற்கில் வயலூர் என்ற இடத்தில் வங்கக் கடலுடன் கலக்கிறது. செய்யாறு இதன் முக்கிய உப நதியாகும்.
பாலாறு பிரச்சனை :
பாலாற்றில் பருவகாலங்களில் மட்டுமே நீர் வரத்து காணப்படுகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பாலாற்றினால் பயன்பெறுகின்றன.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள குப்பத்திற்கு அருகில் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முனைப்பாக உள்ளது.இந்த அணையைக் கட்டினால் அது தமிழகத்திற்கு வரும் ஆற்றின் நீரை பெருமளவில் தடுத்துவிடும்.
இதனால் மேற்கண்ட மாவட்ட மக்கள் தண்ணீருக்காக திண்டாடும் நிலை ஏற்படும் என தமிழகம் அச்சப்படுவதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அடையாறு :
இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களின் வழியாக 42 கி.மீ தூரம் ஓடி, சென்னையில் அடையாறு என்ற இடத்தில் வங்காளவிரிகுடாவில் கலக்கின்றது.
அமராவதி :
பழங்காலத்தில் ‘அன்பொருனை' என்று அழைக்கப்பட்ட இந்த நதி காவிரியின் உபநதியாகும். இது தமிழக கேரள எல்லையில் ஆனைமலைக்கும் பழனிமலைக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது.
உடுமலைப்பேட்டையில் உள்ள அஜந்தா பள்ளத்தாக்கில் இந்த நதியுடன் கல்லபுரம் (Kallapuram) நதி இணைகிறது.
1957-ஆம் ஆண்டு இதன் குறுக்கே அமராவதி அணை (காமராஜரால்) கட்டப்பட்டது. கரூர் அருகே இது காவிரியுடன் கலக்கிறது.
பவானி :
காவிரியின் உபநதியான இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதியாகும். (2nd Largest river).
இது நீலகிரியில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து, அங்குள்ள முக்காலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்குள் வருகிறது.
இது 217 கி.மீ. நீளம் கொண்டது. தமிழக கேரள எல்லையில் தமிழத்திலிருந்து கேரளம் நோக்கி பாயும் பவானி ஆற்றை மேல் பவானி அணை மூலம் தடுத்து பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பவானியுடன் மோயாறு கலக்குமிடத்தில் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது கீழ் பவானி திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.
செய்யாறு :
இது பாலாற்றின் துணை நதியாகும், இது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓடும் ஒரு முக்கிய பருவகால நதியாகும்.
சிற்றாறு :
சிற்றாறு மற்றும் அதன் ஐந்து உபநதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றால மலையில் உ உற்பத்தியாகிறது. இது தாமிரபரணியின் முக்கிய உபநதியாகும்.
கூவம் நதி :
இது திருவள்ளூர் மாவட்டம் 'கூவம்' என்ற இடத்தில் உற்பத்தியாகி 65 கி.மீ தூரத்திற்கு ஓடி சென்னை சேப்பாக்கத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
இது சென்னை நகருக்குள் 18 கி.மீ.தூரத்திற்கு பாய்கின்றது. சென்னையிலுள்ள தீவுத்திடல் இந்நதியின் போக்கில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
இத்தீவில்தான் சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் தாமஸ் முன்ரோவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
1. காவேரி 760 (கி.மீ.)
2. தென்பெண்ணை 396 கி.மீ
3. பாலாறு 348 கி.மீ
4. வைகை 258 கி.மீ
5. பவானி 210 கி.மீ
6. தாமிரபரணி 130 கி.மீ
வென்னாறு :
இது காவிரியின் உபநதியாகும். இது திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களின் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
இது பண்டைய சோழர் காலத்தில் நீர்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
கெடிலம் நதி :
இது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாய்கிறது. இது தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது,
கொள்ளிடம் :
இது காவிரியின் உபநதியாகும், திருச்சிக்கு அருகே மேலணை என்ற இடத்தில் காவிரியிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் கிழக்கு நோக்கி ஒடி பரங்கிப்பேட்டைக்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
முடிகொண்டான் நதி :
இது காவிரியின் உபநதியாகும், இது பாபநாசத்திற்கு அருகில் காவிரியிலிருந்து பிரிந்து 50 கி.மீ.தூரம் ஓடி,திருவாரூர் மாவட்டத்தில் முடிகொண்டான் நகருக்கு அருகில் திருமலராஜனார் நதியில் இணைகிறது. இந்த திருமலராஜனார் நதி குடமுருட்டி ஆற்றின் உபநதியாகும். சிதம்பரம் நகரம் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
தாமிரபரணி :
இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகிறது. 120 கி.மீ. நீளம் கொண்ட இந்த நதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து இறுதியில் புன்னைக்காயல் என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.
சங்க இலக்கியங்களில் இதன் பெயர் பொருநை, பொருநல், தன் பொருனை, தன் பொருத்தம் என்று வழங்கப்பட்டுள்ளது. இது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காலங்களிலும் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் நீரோட்டம் காணப்படுகிறது.
சிறப்பான குற்றாலச் சாரல்கள் தாமிரபரணி தோன்றும் பகுதியில் காணப்படுகின்றன. இது பாபாநாசத்திற்கு அருகில் பாண தீர்த்தம் என்ற பெயரில் இருள் சூழ்ந்த காடுகளுக்கிடையே ஓடுகிறது.
முல்லைப் பெரியாறு அணை :
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையே முல்லைப்பெரியாறு அணையாகும். இது தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இடம் கேரளாவுக்கும், அணை தமிழகத்திற்கும் உரியது. •தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.
• 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே அணைகட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி அணை கட்டுவதற்கான இடம் 999 ஆண்டுகளுக்கு சென்னை மாகாணத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
• 1895-ஆம் ஆண்டு ஜான் பென்னி குக் என்ற ஆங்கிலேயரால் இந்த அணை கட்டப்பட்டது. 1893-இல் 60 அடி உயரத்திற்கும், பின்பு 1894-இல் 94 அடி உயரத்திற்கும், 1895-இல் 155 அடி உயரத்திற்கும் அணை கட்டி முடிக்கப்பட்டது.
• இந்த அணையை அப்போதைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.
• இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் முல்லை ஆறாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் வழியாகப் பாய்ந்து பின்னர் தேனி நகருக்கு கிழக்கில் வைகை ஆற்றுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாக விளங்குகிறது.
• இதன் பின்பு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவேற்றுகிறது.
• இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி.ஆகும்.
• இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தேக்கடி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை :
• 1979-இல் மலையாள மனோரமா இதழ், அணைக்கு ஆபத்து என்ற செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து விட்டது.
• கேரள மக்களின் அச்சத்தை போக்கும் பொருட்டு தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்பும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை.
• இந்த சிக்கல் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. உச்ச நீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி ஆணையை ஆராய்ந்த பின்னர் 2006-ஆம் ஆண்டு நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரளா அரசு இதை ஏற்கவில்லை. மாறாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
• இந்நிலையில் 2010 பிப்ரவரி 18-இல் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 உறுப்பினர் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
• இந்தக் குழுவில் கேரள மாநிலத்தின் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் தமிழகத்தின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடேரி நதி :
இது ஆந்திரமாநிலம் புத்தூரில் உள்ள வெலிகொண்ட மலையில் உற்பத்தியாகி, நெல்லூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக சுமார் 100 கி.மீ தூரம் ஓடி பக்கிங்காம் கால்வாயை அடைகிறது. பின்னர் எண்ணூருக்கு அருகில் வங்கக்கடலில் கலக்கின்றது.
நம்பியாறு நதி :
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தாலுக்காவில் பாய்கின்றது, இதன் நீளம் 45 கி.மீ. ஆகும்.
பரட்டையாறு, தாமரையாறு ஆகியன இதன் துணையாறுகளாகும். மகேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் இவ்விரு ஆறுகளும் சேர்கின்றன.
நன்கஞ்சியாறு :
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தாலுக்காவில் பாயும் இந்நதி அமராவதி நதியின் உபநதியாகும்.
நொய்யல் ஆறு :
இது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. திருப்பூர் நகரம் இந்நதிக்கரையில் அமைந்துள்ளது.
சாயப்பட்டறைக் கழிவுகளால் மிகவும் மாசடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் அமைப்பினர் இதனை "இறந்த ஆறு" என்கின்றனர்.
பரளியாறு :
இது மகேந்திரகிரி மலையில் உற்பத்தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாய்கின்றது. இதன் குறுக்கே பெருஞ்சாணி அணை கட்டப்பட்டுள்ளது.
இதன் குறுக்கே மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப்பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான தொட்டிப் பாலமாகும்.
பரம்பிக்குளம் ஆறு :
இது கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. இது சாலக்குடி நதியின் நான்கு உபநதிகளில் ஒன்றாகும்.
இந்நதியின் குறுக்காக ஆனைமலையில் பரம்பிக்குளம் அணை கட்டப்பட்டுள்ளது.
பைக்காரா நதி :
இது நீலகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய நதியாகும். இது பழங்குடிகளான தோடர்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது. இது முக்குருத்தி மலை உச்சியில் தோன்றுகிறது. இதன் குறுக்கே பைக்காரா அணை கட்டப்பட்டு, நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பைக்காரா நீர்மின் நிலையம் தென்னிந்தியாவின் பழமையான நீர்மின் திட்டங்களுள் ஒன்றாகும். இது இன்றும் 60 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்கிறது. இது 1997-ஆம் ஆண்டு பாரம்பரிய நீர்மின் நிலையமாக அறிவிக்கப்பட்டது.
வைப்பாறு :
இது கேரள எல்லையில் அமைந்துள்ள மலைப்பகுதியில் உற்பத்தியாகி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து தூத்துக்குடிக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 130 கி.மீ. ஆகும்.
வசிஸ்டா நதி :
வசிஸ்ட முனிவரின் பெயரால் அழைக்கப்படும் இந்நதி சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
இது சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், தலைவாசல், அரகாலூர், சித்தேரி ஆகிய பகுதிகளின் வழியாகப் பாய்ந்து கடலூர் மாவட்டத்தை அடைந்து வங்கக்கடலில் கலக்கும் முன்னர் சுவேதா ஆற்றுடன் இணைகிறது.
வெள்ளாறு :
இது சேர்வராயன் மலையில் உற்பத்தியாகி சேலம், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து பரங்கிப்பேட்டை அருகே வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
கொசஸ்தல ஆறு (அ) கொடுதலை ஆறு இது சென்னை மாவட்டத்தில் பாயும் ஒரு நதியாகும். 136 கி.மீ நீளம் கொண்ட இந்த நதி வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்திற்கு அருகில் உற்பத்தியாகி எண்ணூர் உப்பங்கழியில் வங்கக்கடலில் கலக்கின்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதன்குறுக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கு "சத்தியமூர்த்தி சாகர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிறுவாணி ஆறு :
பவானி ஆற்றின் துணை நதியான இது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது.
உலகின் மிகச் சுவையான, தூய்மையான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்நதி கோயம்புத்தூர் நகரின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றுகிறது.
கோவையிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள "கோவைக்குற்றாலம்" இந்நதியில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.
குந்தா ஆறு :
குந்தா பவானியின் உபநதியாகும். நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, எமரால்டு ஆகிய இரண்டு காட்டாறுகள் ஒன்றிணைந்து குந்தா தோன்றுகிறது.
குந்தா நதியில் அமைக்கப்பட்டுள்ள குந்தா நீர்மின் நிலையம் இந்தியா-கனடா நாடுகளின் நட்புறவுச் சின்னமாக விளங்குகின்றது.
ஆவலாஞ்சி அணை, எமரால்டு அணை மற்றும் மேல்பவானி திட்டம் ஆகியவை குந்தா நீர் மின் நிலையத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன.
மோயாறு :
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகம் அமைந்துள்ள பகுதியில் மோயாறு உற்பத்தியாகிறது. இது பவானியின் உபநதியாகும். இந்த நதியில் கூடலூர் என்ற இடத்தில் மோயாறு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இது பவானியுடன் கலக்குமிடத்தில் கீழ் பவானி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்த்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு :
இது தாமிரபரணி ஆற்றின் உபநதியாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்நதி கல்லிடைக் குறிச்சியில் தாமிரபரணி ஆற்றுடன் கலக்கிறது.
இதன் மற்றொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் குறுக்காக 1957-இல் மணிமுத்தாறு அணை காமராஜரால் கட்டப்பட்டது.
வைகை நதி :
இது மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஏலக்காய் மலை, வெள்ளிமலைப் பகுதிகளில் உள்ள வருஷநாடு பள்ளத்தாக்கில் சிறு சிறு ஓடைகளாகத் தோன்றி பின்பு கம்பம் பள்ளத்தாக்கில் ஒன்று சேர்ந்து பெரிய நதியாக உருவாகின்றது.
கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து தென்கிழக்காக சோழவந்தான், மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம் வழியாக ஓடி, இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள பெரிய கண்மாயை அடைந்தவுடன், பாக் ஜலசந்தியில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அருகில் இதன் குறுக்காக வைகை அணை கட்டப்பட்டுள்ளது. இது 1958-ஆம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்டதாகும்.
இந்த அணைதான் மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகின்றது, வைகையின் மொத்த நீளம் 250 கி.மீ. ஆகும், சுருளியாறு, தேனியாறு, வராக நதி, மஞ்சளாறு, முல்லையாறு போன்றவை இதன் முக்கிய உபநதிகளாகும்.
1886-இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி கேரள தமிழக எல்லையில் பெரியாற்றின் குறுக்கே முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடைவின் மூலம் நீரானது வைகையில் விடப்படுகிறது.
முல்லையாறு போடி மலையில் தோன்றிய கோட்குடியாறு, சின்னாறு, கூவிளங்காறு, முத்துக்கொம்பையாறு போன்றவற்றை தன்னுடன் இணைத்துக் கொண்டு, தேனிக்கு கீழ்ப்புறத்தில் மூனாறுக்குத் தெற்கில் வைகையுடன் இணைந்து விடுகிறது.
பழனி மலையிலிருந்து வரும் வராக நதி, கொடைக்கானலிருந்து வரும் பாம்பாறு ஆகிய இரண்டும் வைகையுடன் இணைகின்றன. பாம்பாற்றில், கொடைக்கானலின் சரிவில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
சோமசுந்தரப் பெருமான் குண்டோதரனின் தாகத்தை தாரிப்பதற்காக கோடிட்டு 'கைவை' என்று கட்டளையிட வைகை, பெருக்கெடுத்து ஓடி குண்டோதரன் மற்றும் மதுரை மக்களின் தாகத்தை தணித்தது என்பது புராணச் செய்தியாகும்.