இரட்டைமலை சீனிவாசன் (Diwan Bahadur Rettamalai Srinivasan)
தமிழகத்தில் பட்டியலின மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன். இந்திய அளவிலான பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது.
அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜுலை 7, 1859 செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர் ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
மகாசன சபையைத் தோற்றுவித்து, திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
இளமைக்காலம் :
சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் 'எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.
கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர். [சான்று தேவை]
வாழ்க்கை வரலாறு நூல் :
இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி "திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்'' என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல்மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.
கல்வியும் குடும்பமும் :
கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பிராமண மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார்.
வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்து- கொண்டார்.
இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்கு வந்தார்.
தென் ஆப்பிரிக்கப் பயணம் :
இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.
இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார்.
சட்டசபை உறுப்பினர் :
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் ஆதி திராவிடரில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
(1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன்,எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (பட்டியல் சாதியினர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
1920 முதல் 1936 வரை ஆதி திராவிடர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.
மறைவு :
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு "இராவ்சாகிப்", "திவான் பதூர்", "இராவ் பகதூர்" ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், "திராவிடமணி" எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
இவர் 1945 செப்டம்பர் 18, 2-45 மணியளவில் எண்.4, எம். வீரபத்திரன் தெரு, பெரியமேடு பகுதியில் எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.