சுயமரியாதை இயக்கம் தொடக்கம்
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சீர்த்திருத்தவாதியான பெரியார் ஈ.வெ.இராமசாமி நாயக்கர், 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சுயமாரியதை இயக்கம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தியதுடன், அவர்களை சமூதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது.
இவ்வியக்கம் மதம்,ஜாதி, அரசியல் மற்றும் சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தது. மூட நம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது. இவ்வியக்கம் பெண்கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணமுறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடியது.
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வகுக்கப்பட்ட கொள்கைகள் திராவிட இன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாநாட்டில்தான் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றம் பெண்ணுரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டீசிங்காரவேலரின் ஆலோசனைப்படி 1932 டிசம்பரில் “சுயமரியாதை சமதர்ம திட்டத்தைப்" பெரியார் உருவாக்கினார். அரசியலில் பிராமணர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், தன்மான இயக்க கொள்கைகளை சட்டமாக்கவும், பொருளாதாரப் பொது உடைமையை ஏற்படுத்தவும் சுயமரியதை சமதர்ம திட்டத்தை அவர் செயல்படுத்தினார்.
இவ்வியக்கம் ஓர் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட விரும்பியதால் 1952-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கம்" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வெளிவந்த "புரட்சி" என்ற இதழுக்கு முதன் முதலில் எஸ்.ஆர்.கண்ணம்மாள் என்பவர் பதிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரே தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் ஆவார்.
1925-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் பெரியார் குடியரசு இதழைத் தொடங்கினார். அவ்விதழை அச்சடிக்கும் அச்சகத்திற்கு “உண்மை விளக்க அச்சகம்” என்று பெயரிட்டார். முதல் இதழை திருப்பாதிரிப்புலியூர் ஞானியர் சுவாமிகள் வெளியிட்டார்.
1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இவ்வியக்கத்தின் மாநாட்டில் "மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிப் பெயர்களை சேர்க்கக்கூடாது” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
1932-இல் வெளியிட்ட சுயமரியாதை வேலை திட்டத்தில் இந்திய சமூகத்தில் சாதி மதப் பிரிவுகளைக் குறிக்கும் குறிப்புகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இவ்வியக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண முறை "சுயமரியாதைத் திருமணம்" எனப்படுகிறது. இம்முறையில் வழக்கமாக பின்பற்றிவரும் பிராமண புரோகிதர், சமஸ்கிருத மந்திரங்கள், தாலிகட்டுதல் போன்ற சடங்குகள் இன்றி திருமணம் எளிமையாக இருந்தது.
1967-இல் பேரறிஞர் அண்ணா முதல்வரானதும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு திருமண சட்டத்தில் 7 (அ) என்ற புதிய பிரிவை இணைத்து இந்து திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது 1968 ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்தது.