நீதிக்கட்சி தொடக்கம்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசியல் கட்சியே நீதிக்கட்சியாகும். 1916-ஆம் ஆண்டு டி.எம்.நாயர் மற்றும் தியாகராயச் செட்டி ஆகியோரால் சென்னையில் "தென்னிந்திய நல் உரிமைக்கழகம்" தோற்றுவிக்கப்பட்டது. இதுவே பின்னர் நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் அதிக பிரதிநிதித்துவம் கோரியது. இக்கட்சி தமிழில் 'திராவிடன்', தெலுங்கில் 'ஆந்திர பிரகாசிகா' மற்றும் ஆங்கிலத்தில் 'ஐஸ்டிஸ்' ஆகிய பத்திரிகைகளை வெளியிட்டது.
நீதிக்கட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிராமணரல்லாதவர் நலன் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
நீதிக்கட்சியின் ஆட்சி
1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1920-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திரு.சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் ஆட்சி அமைந்தது. 1923-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பனகல் ராஜா தலைமையில் ஆட்சி அமைந்தது. உட்கட்சி பூகலால் 1926-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெறவில்லை. டாக்டர்.சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைக்கப்பட்டது.
இந்த அமைச்சரவையில்தான் முதன்முறையாக பெண் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சிறப்புப் பெற்ற பெண்மணி டாக்டர்.முத்துலட்சுமி ஆவார்.
1927 முதல் நீதிக்கட்சி மாநில சுயாட்சி கோரிக்கை எழுப்பியது. 1930-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று ப.முனுசாமி நாயுடு தலைமையில் ஆட்சி அமைத்தது. 1932-இல் முனுசாமி நாயுடுவை பதவி நீக்கிவிட்டு பொப்பிலி இராஜா முதலமைச்சராக பதவியேற்றார்.
மாநில சுயாட்சி திட்டத்தின்படி 1937-இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. சி.ராஜகோபாலாச்சாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நீதிக்கட்சியின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.
1938 டிசம்பர் 22-இல் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிது காலம் நீதிக்கட்சி செயல்பட்டது.
பெரியாருக்கும் பார்ப்பனத் தலைவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1944-ஆம் ஆண்டு அக்டோபார் 4-ஆம் தேதி சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பெரியார் நீதிக்கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என மாற்றம் செய்து அதை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் நீதிக்கட்சி அரசியல் இயக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
நீதிக்கட்சியின் சாதனைகள்
நீதிக்கட்சி தனது 17 ஆண்டுகால ஆட்சியின் போது பல சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்தது. நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம் - 1920,ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தியது.
மதராஸ் தல போர்டுகள் சட்டம் - 1920, மதராஸ் கிராமப் பஞ்சாயத்துகள் சட்டம் - 1920 ஆகிய இரண்டு உள்ளாட்சிமன்ற சட்டங்கள் மூலம் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1921-இல் பிறப்பிக்கப்பட்ட இனவாரி ஒதுக்கீட்டு அரசாணை (Communal G.O.) பிராமணர் அல்லதவரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளித்தது.
1924-இல் பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது. இது 1929-ஆம் ஆண்டு பொதுப்பணி தேர்வாணையமாக மாறியது. இதுவே இந்தியாவின் முதல் பொதுப்பணி தேர்வாணையமாகும்.
1925-இல் ஆந்திரா பல்கலைக்கழகமும், 1929-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. 1926-இல் இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றப்பட்டது. கோயில்களில் வரவு - செலவு கணக்குகளை முறைப்படுத்த கோயில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
1921-ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. பெண்கள் வன்கொடுமைத் தடைசட்டம் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் இயற்றப்பட்டன. 1930-இல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தியாகராயச் செட்டியாரால் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. இக்கட்சி ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கமளித்தது.
நீதிக்கட்சியின் ஆட்சியில் எம்.சி.ராஜா என்ற ஆதிதிராவிடத் தலைவரின் அரிய முயற்சியால், 1922-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களை இழிவுபடுத்தும் பறையர் - பஞ்சமர் என்ற சொல் நீக்கப்பட்டு அவர்களை "ஆதிதிராவிடர்' என்று அழைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1892-ஆம் ஆண்டிலேயே ஆதிதிராவிடர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.