முல்லா கதை
ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். வியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை.
இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.
முல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அவருக்கு யோசனையொன்று தோன்றியது. திடீரென அவர் "நெருப்பு! நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது" எனக் கூக்குரல் போட்டார். வேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள்.
முல்லாவைப் பார்த்து "எங்கே தீப்பற்றிக் கொண்டது? என்று பரபரப்புடன் கேட்டார்கள். முல்லா சாவதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது.
நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே? என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள். நெருப்பு என் வயிற்றில் தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா.