போஜராஜன்
குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சர்கள் முதலானோர் சூழ, மேள தாளங்கள் முழங்க, போஜராஜன் சபா மண்டபத்தை அடைந்தான். அவன் முகத்தில் தெய்வீகக்களை படர்ந்து ஒளி வீசியது. உள்ளத்தில் உவகை மலர்ந்தது.
போஜராஜன் சிம்மாசனத்தின் அருகில் நின்று தெய்வத்தை தியானித்து, வணங்கி முதல்படியில் அடி எடுத்து வைத்தான். அப்படியிலிருந்து பதுமை கைலாகு கொடுத்து வரவேற்று அப்படியே ஒவ்வொரு படியிலும் அடி எடுத்து வைத்து ஏறும் பொழுது அந்தப் படிகளிலிருந்த படிகளையும் கடந்து பீடத்தின் அருகே நின்று சபையினரை வணங்கி சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
வாத்திய இசைகள் ஒலித்தன. வாழ்த்து ஒலிகள் முழங்கின! போஜராஜன் இந்திர சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆட்சி புரியத் தொடங்கினான். பதுமைகள் நன்றி கூறி விடைபெற்றுத் தேவலோகம் சென்ற காட்சி பரவசம் ஊட்டியது. போஜராஜன், நாட்டு மக்களின் நலன்களில் கவனம் செலுத்தி, தருமாபுரியை நீண்ட நாட்கள் ஆட்சி செலுத்தி வந்தான்.