ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்று, மகா லட்சுமி எட்டு திருவடிவங்களில் எட்டு வகையான செல்வங்களை நமக்கு அருள்கிறாள் என்பது ஐதீகம். இந்த எட்டு லட்சுமிகளில் ஒருவரின் அருள் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால், மற்ற லட்சுமியரின் அருளும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். மற்ற லட்சுமிகள் நம்மை விட்டு விலகினாலும், ஒரு லட்சுமி மட்டும் நம்மை விட்டு விலகவே கூடாது.
அந்த லட்சுமி யார் தெரியுமா?
கன்னியாபுரியை ஆட்சி செய்து வந்த ராஜா பர்த்ருஹரி, வாழ்வின் மீது கொண்ட விரக்தியினால் தனது அரசப் பதவியைத் துறந்துவிட்டுத் தவம் செய்ய காட்டுக்குச் சென்றுவிட்டான். பர்த்ருஹரியின் விருப்பப்படி அவருடைய தம்பி விக்கிரமாதித்யன் அரியணை ஏறினான். பட்டி அமைச்சராகப் பொறுப் பேற்றுக்கொண்டான். விக்கிரமாதித்தன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்துகொண்டு வந்தான். நாடு அனைத்து வளங்களுடனும் செழித்துச் சிறந்திருந்தது. மக்கள் அனைவரும் கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவனுக்கும் சோதனைக் காலம் தொடங்கியது. அவனுடைய கிரகநிலைகள் மாறத் தொடங்கின. அதுவரை அவனுக்கு அனைத்து அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கிக்கொண்டிருந்த கிரகங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின.
கிரக நிலைகள் மாறத் தொடங்கியதுதான் தாமதம். அவனுக்கு அருள்புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமியரும் ஒவ்வொருவராக அவனை விட்டு விலகத் தொடங்கினார்கள். விக்கிரமாதித்யனின் நாட்டை விட்டு முதலில் வெளியேறியவள் ஆதிலட்சுமி. அவள் விலகிச் சென்றது தான் தாமதம், நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொள்ளை நோய் பரவியது. நோயின் தாக்கத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போனார்கள். ஆதிலட்சுமி விலகியதால் ஏற்பட்ட இந்த நிலை மாறுவதற்கு முன்பே அடுத்ததாக தான்ய லட்சுமி வெளியேறினாள். நாட்டில் மிகப்பெரிய பஞ்சம். ஒருவேளை உணவுக்கே அனைவரும் கஷ்டப்படும் நிலை உருவானது. அரண்மனையில் சேர்த்து வைத்திருந்த உணவு தானியங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. அடுத்து வெளியேறியவள் தன லட்சுமி.
சேர்த்து வைத்திருந்த செல்வம் அனைத்தும் கரைந்து போனது. இவர்களைத் தொடர்ந்து கல்விக்கு உரிய வித்யா லட்சுமி, வெற்றி தேடித் தரும் விஜயலட்சுமி, குழந்தைப் பேறு அளிக்கும் சந்தான லட்சுமி, நற்பாக்கியம் அளிக்கும் கஜ லட்சுமி என்று ஒவ்வொருவராக விலக, விலக விக்கிரமாதித்யனின் நாட்டிலும், அவனது அரண்மனையிலும் வறுமையும் கவலையும் சூழ்ந்தது. தனக்கு அருள் புரிந்துகொண்டிருந்த அஷ்ட லட்சுமிகள் ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருந்ததைக் கண்ட விக்கிரமாதித்யன் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தான். அவனது மனதில் கவலைகள் சூழத் தொடங்கின.
தைரியம் அவனை விட்டு விலகிக் கொண்டிருப்பதை உணர்ந்த விக்கிரமாதித்யன் ஓடிச் சென்று தைரிய லட்சுமியின் கால்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, "ஹஹதாயே... அனைத்து லட்சுமிகளும் என்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. ஆனால், தாங்கள் என்னை விட்டு ஒரு நாளும் நீங்கக் கூடாது. தாங்கள் உடன் இருந்தால் இழந்தவை அனைத்தையும் மீண்டும் பெற்று விடுவேன் நான். தைரியத்தையும் நம்பிக்கையையும் நான் வாழ்க்கையில் ஒரு நாளும் இழக்கக் கூடாது. அதற்குத் தாங்கள் எப்பொழுதும் எனக்குத் துணையிருக்க வேண்டும்" என்று மன்றாடினான்.
விக்கிரமாதித்யனின் வேண்டுதலைக் கேட்டு மனமுருகிய தைரியலட்சுமி, அவனுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டாள். வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தாலும் தைரியத்தை இழக்காத விக்கிரமாதித்யன் மீண்டும் கடுமையாகப் போராடி இழந்த அனைத்துச் செல்வங்களையும் பெற முயற்சி செய்தான். பட்டியை அழைத்து வேறு தலைநகர் அமைக்க இடத்தைத் தேடக் கட்டளையிட்டான். அப்படி அவன் தேடிச் செல்லும் போது தான் காட்டில் பொய்கை ஒன்றையும், அதன் கரையில் ஆலமரத்தடியில் இருந்த காளி கோயிலையும் கண்டான்.
அங்கே ஹஎவன் ஒருவன் ஆலமரத்தின் ஏழு விழுதுகளையும் ஒரே வெட்டில் வெட்டி, காளி தேவியின் கோயிலுக்கு முன் இருக்கும் சூலத்தில் விழுந்து உயிர்த் தியாகம் செய்கிறானோ அவனுக்குக் காளி தேவியின் பூரண அருள் கிடைக்கும்" என்று ஓர் ஏட்டில் எழுதி இருந்ததைப் பார்த்தான் பட்டி. அந்தத் தகவலை விக்கிரமாதித்யனிடம் தெரிவித்தான். காளிக் கோயிலுக்குச் சென்ற விக்கிரமாதித்யன் தனக்குத் துணையாக இருக்கும் தைரிய லட்சுமியையும், காளி தேவியையும் வேண்டிவிட்டு ஏழு விழுதுகளையும் ஒன்றாகச் சுருட்டி ஒரே வெட்டில் வெட்டிவிட்டு, சூலத்தின் மீது பாய்ந்தான். சூலம் மீது விழுந்து தன்னைக் காளிக்குப் பலி கொடுப்பதற்கு வேண்டிய மன உறுதியை அளித்தவள் அவனுடன் இருந்த தைரிய லட்சுமியே. சூலத்தில் விழுவதற்கு முன்பே அவனைத் தாங்கிப் பிடித்த காளி தேவி, அவனுடைய உயிரையும் காப்பாற்றி, அவனுக்கு வேண்டிய வரங்களையும் அளித்தாள்.
காளி தேவியின் அருள் கிடைத்ததும் மற்ற லட்சுமிகள் ஒவ்வொருவராக அவனிடம் திரும்பி வரலானார்கள். படை திரட்டி வெற்றிகளைக் குவித்தான். செல்வம் அவனிடம் குவியத் தொடங்கியது. சகல சௌபாக்கியங்களும் அவனைச் சேரத் தொடங்கின. இதற்குப் பிறகுதான் விக்கிரமாதித்யன் உஜ்ஜைனி என்ற மாபெரும் நகரத்தை அமைத்து ஆயிரம் ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினான். இந்திரலோகம் சென்று பதுமைகள் காவல் காக்கும் சிம்மாசனத்தைக் கொண்டு வந்து அதில் அமரவும் செய்தான்.