வேதாளம் கதை கூறுதல் :
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தியனிடம் தான் ஒரு கதை சொல்லப் போவதாகவும் அக்கதையின் முடிவில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை விக்ரமாதித்தியன் கூறவேண்டும் என்று கூறி, வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது.
ஒரு முறை சந்திரகாந்தன் என்கிற மன்னன் "சிவபுரி" என்கிற நாட்டை ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்தவனான அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் மன்னன் சந்திரகாந்தனின் அரண்மனை வாயில் காப்பாளன் சந்திரகாந்தனிடம் வந்து "நமது நாட்டை எதிரி நாட்டு படைகள் தாக்கப் போவதாக" கூறினான்.
இதைக் கேட்டு திகைத்த மன்னன் 'அரண்மனை வாயில் காப்பாளனான உனக்கு இது எப்படி தெரியும்"? எனக் கேட்டான். அதற்கு பதிலேதும் அளிக்காமல் அமைதியாக இருந்தான் அந்த வாயில் காப்பாளன். சில நாட்கள் கழித்து திடீரென்று எதிரி நாட்டுப் படைகள் சந்திர காந்தனின் சிவபுரி நாட்டை தாக்கின் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக இருந்த சந்திரகாந்தனும், அவனது படைகளும் மிகவும் வீரத்துடன் சண்டையிட்டு எதிரி நாடு படைகளை நாட்டை விட்டே துரத்தினர்.
அப்போது சந்திரகாந்தனுக்கு தன் அரண்மனை காவலன் கூறிய விஷயம் நினைவிற்கு வந்தது. மறுநாள் அவனை அழைத்து அவனுக்கு பரிசு தர எண்ணினான் மன்னன்.
அதன் படியே அடுத்த நாள் அரசவையைக் கூட்டி ஆயிரம் பொற்காசுகளை அக்காவலனுக்கு அளித்தான் மன்னன். சந்திரகாந்தன் அப்போது "நம் நாட்டை எதிரிகள் தாக்கப்போவது உனக்கு எப்படி முன்பே தெரியும்? என மன்னன் கேட்டான். அதற்கு அக்காவலன் தனக்கு சில நிகழ்வுகள் அது நிஜத்தில் நடப்பதற்கு முன்பே, தனது தூக்கத்தில் கனவுகள் மூலம் தெரிய வந்ததாக கூறினான்.
கேள்வி கேட்ட வேதாளம்:
இதைக் கேட்ட சந்திரகாந்தன் "நீ ஆயிரம் பொற்காசுகளை வைத்துக்கொள்ளலாம், ஆனால் நீ இப்போது காவலன் பணியிலிருந்து நீக்கப்படுகிறாய்" எனக் கூறினான். இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம், விக்ரமாதித்தியனிடம் "விக்ரமாதித்தியா தன் நாட்டு வெற்றிக்கு காரணமாக இருந்த தன் அரண்மனைக் காவலனுக்கு ஆயிரம் பொற்காசுகளை கொடுத்துவிட்டு, அவனை பணியிலிருந்து சந்திரகாந்தன் ஏன் நீக்கினான்? எனக்கேட்டது.
சற்று நேரம் சிந்தித்த விக்ரமாதித்தியன், "காவலன் தன் கனவின் மூலம் எச்சரித்து தன் நாட்டைக் காப்பாற்றியதற்கு பரிசாக அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் தரப்பட்டது, அதே நேரத்தில் தன் அரண்மனை காவலன் பணியின் போது அவ்வீரன், தூங்கியிருக்கிறான். அப்போதே அவனுக்கு அக்கனவு ஏற்பட்டிருக்கிறது. தன் கடமையில் அலட்சியமாக இருந்த காரணத்தினால் அவனை பணியில் இருந்து மன்னன் சந்திரகாந்தன் நீக்கியது சரியே" என்று பதிலளித்தான்.
விக்ரமாதித்தியனின் இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.