மராத்தியர்கள்
மதுரையை ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் அழகிரி என்பவரை தஞ்சாவூரின் ஆளுநராக நியமனம் செய்தார். ஆனால் இவர் சொக்கநாதருடன் கருத்து வேறுபாடு கொண்டு செங்கமலதாஸ் என்பவரை தஞ்சாவூர் நாயக்கராக நியமனம் செய்யும்படி பிஜப்பூர் சுல்தானின் உதவியைக் கோரினார். எனவே பிஜப்பூர் சுல்தான் வெங்கோஜி என்பவரை தஞ்சாவூரைக் கைப்பற்ற அனுப்பினார். கி.பி.1676 முதல் கி.பி.1856 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூரை மராத்தியர்கள் ஆட்சிப்புரிந்தனர்.
வெங்காஜி (கி.பி.1675 முதல் 1684)
தஞ்சை மராத்திய அரசின் முதல் அரசராவார். இவர் எக்கோஜி என்றும் அழைக்கப்பட்டார். இவர் கி.பி.1675 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்தினர்.
இரண்டாம் ஷாஜி (கி.பி. 1712 முதல் கி.பி. 1728)
வெங்காஜியின் மகன் இரண்டாம் ஷாஜி திறமையான அரசராவார். இவர் மதுரையைப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இவருக்குப் பிறகு இவரது சகோதரர் முதலாம் சரபோஜியும் அவரைத் தொடர்ந்து துக்காஜி என்பவரும் தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். முதலாம் சரபோஜி கி.பி. 1712 முதல் கி.பி. 1728 வரை ஆட்சிபுரிந்தார். இவரது காலத்தில் சிவகங்கை என்ற சுதந்திர அரசு தோன்றியது. துக்காஜி வாரிசின்றி இறந்தார்.
எனவே அவரது மரணத்திற்கு பிறகு வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. இப்போரில் கர்நாடக நவாப் ஆதரவோடு பிரதாப்சிங் என்பவர் தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவர் தஞ்சாவூரில் அமைதி மற்றும் ஒற்றமையை நிலை நாட்டினார்.
கி.பி .1763 - ஆம் ஆண்டு துல்ஜாஜி என்பவர் தஞ்சாவூரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரத்திற்கு இடையே எல்லைத் தகராறு ஏற்பட்டது. இராமநாதபுர மன்னர் ஆற்காட்டு நவாப்பின் உதவியை நாடினார். இதனால் ஆற்காட்டு நவாப் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். தஞ்சாவூர் ஆற்காட்டு நவாப்பின் கட்டுப்பாட்டில் வந்தது.
இது ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கம்பெனி நிர்வாகிகள் தஞ்சாவூரின் ஆட்சியாளராக துல்ஜாஜியை அமர்த்தும்படி சென்னை கவர்னருக்கு ஆணையிட்டனர். துல்ஜாஜி மீண்டும் கம்பெனியின் ஆதரவோடு தஞ்சாவூரின் ஆட்சியாளரானார். அங்கு ஆங்கிலப்படை ஒன்று அமைதி காக்க நிறுத்தப்பட்டது.
அமர்சிங் மற்றும் இரண்டாம் சரபோஜி (கி.பி.1787)
இரண்டாம் சரபோஜி துல்ஜாஜியின் தத்துப் பிள்ளையாவார். இவர் 1787 - ஆம் ஆண்டு தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அமர்சிங் இவரது பாதுகாப்பாளர் ஆனார். தத்துப் பிள்ளையான இரண்டாம் சரபோஜி சட்டப்படி அரசராக முடியாது என்று அமர்சிங் அரியணைக்கு உரிமை கோரினார். ஆங்கிலேயர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் அமர்சிங் அரசரானார். இவர் சர்வாதிகார முறையில் ஆட்சி புரிந்தார். எனவே கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் அமர்சிங்கைப் பதவி நீக்கம் செய்துவிட்டு மீண்டும் இரண்டாம் சரபோஜியை அரசராக்கினார். வெல்லெஸ்லி பிரபு காரத்தில் இரண்டாம் சரபோஜி ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் பெற்றார். தஞ்சாவூரின் விவகாரங்களை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினார்.
இரண்டாம் சரபோஜியின் மகன் இரண்டாம் சிவாஜி 1799 - ஆம் ஆண்டு தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை பெற்றார். இவரது ஆட்சி 1855 - வரை நீடித்தது. இவர்தான் தஞ்சை மராத்திய அரசின் கடைசி அரசர் ஆவார். இவருக்கு ஆண் வாரிசு கிடையாது, எனவே நாடு இழக்கும் கொள்கையின்படி, தஞ்சாவூர் 1856 - ஆம் ஆண்டு ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூரில் மராத்தியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஷாஜி மன்னனுடைய அரண்மனையில் இராமபத்ரா மற்றம் அல்லூரி குப்பண்ணா போன்ற புகழ்பெற்ற தெலுங்கு புலவர்கள் இருந்தனர். அல்லூரி குப்பண்ணா ஆந்திர காளிதாரசாகப் போற்றப்பட்டார். வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்தது. நிர்வாகத்தில் புரோகிதர்கள் உயர்வான இடத்தை பெற்றுத் திகழ்ந்தனர். ராம்பத்ர தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர் போன்ற சிறந்த சமஸ்கிருத கவிஞர்கள் வாழ்ந்து வந்தனர். துல்ஜாஜி ஓவியம், இசை, தத்துவம், வானவியல் மற்றும் நடனத்தில் அதிக ஆர்வம் காட்டினார்.
இரண்டாம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி மஹால் தஞ்சை மராத்தியர்களின் கலை, கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இது உயர்க்கல்வி மற்றும் ஆய்வுமையமாகத் திகழ்கிறது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய நூலகமாக விளங்குகிறது. இரண்டாம் சரபோஜி மன்னர் கி.பி.1805 - ஆம் ஆண்டு தஞ்சையில் ஒர் அச்சுக் கூடத்தை நிறுவினார். திருவாரூர் வைத்தியநாத தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாத தேசிகர், சீர்காழி அருணாச்சல கவிராயர் போன்றவர்கள் தஞ்சை மராத்திய பேரரசில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களாக விளங்கினர்.
மாவீரன் சிவாஜி:
பீஜப்பூர் சுல்தான் ஆட்சியின் கீழ் தளபதியாகப் பணியாற்றியவர் ஷாஜி போன்ஸ்லே. பீஜப்பூர் சுல்தான் தஞ்சாவூர், செஞ்சி மற்றும் கர்நாடகப் பகுதிகளைக் கைப்பற்றி அப்பகுதிகளுக்கு ஷாஜிபோன்ஸ்லேவை ஆளுநராக நியமித்தார். மாவீரன் சிவாஜி ஷாஜிபோன்ஸ்லேவுக்கு சிவாஜி, வெங்காஜி என்ற இரு மகன்கள் இருந்தனர். சிவாஜி மகாராஷ்டிரப்பகுதியில் மராத்திய அரசை ஏற்படுத்தினார். வெங்காஜி தஞ்சாவூர் பகுதியில் மராத்திய அரசை எற்படுத்தினார். சிவாஜியின் தாயார் பெயர் ஜிஜாபாய். இவர் சிவாஜிக்கு இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகள் மூலம் தைரியத்தையும் தேசபக்தியையும் ஊட்டினார்.
தாதாஜிகொண்டதேவ் சிவாஜிக்கு நிர்வாகக் கலையைக் கற்றுக்கொடுத்தார். சிவாஜி தமது திறமையாலும், மதி நுட்பத்தாலும், சிறிய ஜாஹிர்தார் பதவியிலிருந்து மிக உயர்ந்த சத்ரபதி என்னும் அரசர் நிலையை அடைந்தார். சிவாஜி தமிழ்நாட்டின் மீது படையெடுத்து செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்பு அப்பகுதிகளில் தனது பிரதிநிதியாக சந்தாஜி என்பவரை நியமித்தார்.
சேதுபதிகள் (கி.பி.1605)
17 - ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இராமநாதபுரத்தையும், சிவகங்கைப் பகுதியையும் சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். கி.பி.1605 - ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் சேதுசமுத்திரம் மற்றும் இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு பாதுகாவலராக சடைக்க தேவரை நியமித்தார். சேது சமுத்திரத்தின் பாதுகாவலர் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்.
இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் வாழ்ந்துவந்த மறவர்கள் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் இராமநாதபுரத்தை தலைநகராகக் கொண்டிருந்தனர். திருமலை நாயக்கர், இரகுநாத சேதுபதியின் இராணுவ உதவியினைப் பாராட்டி அவருக்கு "திருமலை சேதுபதி" என்ற பட்டத்தை வழங்கினார். மறவர்குல மன்னர்களில் மிகவும் சிறப்பாக விளங்கியவர் கிழவன் சேதுபதி. இவர் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மறவர் நாட்டை மீட்டார். கிழவன் சேதுபதி கி.பி.1707 - இல் மறவர் நாட்டை சுதந்திர நாடாக அறிவித்ததுடன், தலைநகரை புகழூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றினார்.
தொண்டைமான்கள்:
கிழவன் சேதுபதி புதிதாக புதுக்கோட்டை இராஜ்ஜியத்தை ஏற்படுத்தி, தனது மகன் இரகுநாத ராஜா தொண்டைமானை அதன் முதல் ஆட்சியாளராக நியமித்தார். விஜய ரகுநாத தொண்டைமானுக்கு, ஆற்காடு நவாப் "ராஜா பகதூர்'' என்னும் பட்டத்தை வழங்கினார். புதுக்கோட்டை தொண்டைமான்கள் புதுக்கோட்டை ராஜாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். தொண்டைமான்கள் காலத்தில் சின்னம்மை நோய்க்கு எதிராக தடுப்பூசி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா விடுதலை பெற்றவுடன், 1948 - ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகும்.
நவாப்புகள்:
முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் தளபதியான சுல்பிகர்கான் கர்நாடகப் பகுதியில் முகலாயர்களின் ஆட்சியை ஏற்படுத்தி அதற்கு நவாப்பு ஆனார்.
கர்நாடகப் பகுதியில் முகலாயப் பேரரசின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி நவாப்பு என்றழைக்கப்பட்டார். ஆற்காடு நவாப்புகளின் தலைநகரமாக விளங்கியது. வாலாஜாவைச் சேர்ந்த அன்வர்-உத்-தீன் நவாப்பாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். கி.பி .1746 இல் நவாப்பு இராணுவத்திற்கும் . பிரெஞ்சு இராணுவத்திற்கும் இடையே அடையாறு என்னுமிடத்தில் போர் நிகழ்ந்தது. இப்போர் அடையாறு போர் என அழைக்கப்பட்டது. இப்போரில் பிரெஞ்சு இராணுவம் நவாப்பு இராணுவத்தை தோற்கடித்தது.
சென்னையிலுள்ள அமீர் மஹால் நவாப்பு கால கட்டடக்கலையின் சிறப்பிற்கு சான்றாக விளங்குகிறது. அமீர் மஹால் என்பது ஆற்காடு நவாப்பு வாழும் அரண்மனையாகும். சந்தா சாகிப்பின் மகன் ராஜா சாகிப்பை நவாப்பாக்கி கர்நாடகப் பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவர தனது பிரெஞ்சுக்காரர்கள் முயன்றனர். - ஆனால் அம்முயற்சியை ஆங்கிலேயர்கள் முறியடித்ததுடன், நவாப்புகளைத் தோற்கடித்து, அவர்களின் ஆட்சிப்பகுதிகளை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.