நாயக்கர்கள் தேற்றம் :

நயன்கார முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இம்முறையின்படி நாட்டின் அனைத்து நிலங்களும் அரசருக்கே சொந்தமாகும். அரசரிடமிருந்த நிலங்களைப் பெற்றவர்கள் நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். "நாயக்" என்ற வார்த்தைக்கு "தலைவர்" அல்லது "தளபதி" என்று பொருள். நாயக்கர்கள் விஜயநகர அரசர்களின் முகவர்களாக, தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதிகளை ஆட்சிப் புரிந்தனர். அச்சுதராயரின் ஆட்சியில், 200 நாயக்கர்கள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தனர். அவர்களில் மதுரை, செஞ்சி, தஞ்சை மற்றும் வேலூர் நாயக்கர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.

நயன்கார முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார். இம்முறையின்படி நாட்டின் அனைத்து நிலங்களும் அரசருக்கே சொந்தமாகும். அரசரிடமிருந்த நிலங்களைப் பெற்றவர்கள் நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அரசரிடமிருந்து நிலங்களைப் பெற்ற காரணத்தால், நாயக்கர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும், அவ்வப்போது படைப்பிரிவையும் அளித்தனர். அரசர் பெயரிலேயே நாயக்கர்கள் நிர்வாகத்தை நடத்தினர். மேலும் அரசரின் பிறந்த நாள் விழாவின் போது நாயக்கர்கள் அரசருக்கு பரிசுப் பொருட்களும் பணமும் வழங்கினர். இம்முறையே நயன்கார முறை எனப்பட்டது. கி.பி .1565 - இல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. இதனால் அதன் கீழ் இருந்த செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை நாயக்கர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

மதுரை நாயக்கர்கள்:

விஸ்வநாத நாயக்கர் (கி.பி.1529 - கி.பி.1564)
விஜயநகரப் பேரரசின் தெற்கு மண்டலமாக மதுரை விளங்கியது கிருஷ்ணதேவராயர் கி.பி.1529 - இல் மதுரை நாயக்கர் அல்லது ஆளுநர் என்னும் நிலையில் விஸ்வநாத நாயக்கரை நியமித்தார். இவர்தான் மதுரையின் முதல் நாயக்கர் ஆவார். இவர் பாளையக்காரர் முறையை தனது நிர்வாகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தினார்.

குறிப்பு:

பாளையக்காரர் முறை என்பது படைப்பிரிவுடன் கூடிய நிலமானிய முறையாகும். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இராணுவம், காவல் மற்றும் வருவாய் நிர்வாகத்தை மேற்கொண்டனர். காவல் பணி முக்கியமானதாக கருதப்பட்டது. மக்கள் "காவல் பிச்சை" என்ற வரியினை பாளையக்காரர்களுக்கு செலுத்தினர்.

இவர் தமது ஆட்சிப்பகுதியினை 72 பாளையங்களாகப் பிரித்தார். இவர் மதுரை நாயக்கர் ஆட்சியின் உண்மையான நிறுவனராகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் தளவாய் அரியநாதர் அமைச்சராகவும் படைத்தலைவராகவும் விளங்கினார். இவருக்குப்பின் இவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் பேரன் வீரப்ப நாயக்கர் ஆகியோர் ஆண்டனர். 

திருமலை நாயக்கர் (கி.பி.1623 - கி.பி.1659)

மதுரை நாயக்கர் வரலாற்றில் திருமலை நாயக்கரின் ஆட்சி காலம் ஒரு புது சகாப்தமாக கருதப்படுகிறது. அவருக்கு முன்பு ஆறு அரசர்களும், அவருக்குப் பிறகு ஆறு அரசர்களும் மதுரையை ஆட்சி புரிந்தனர். மதுரை நாயக்கர்களிலேயே தலைசிறந்த மன்னராக திருமலை நாயக்கர் கருதப்படுகிறார். இவர் தனது தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றினார். இவர் விஜயநகர அரசர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டு சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தார்.

தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால், மதுரை கோயிலுள்ள ராஜகோபுரம், மதுரை புது மண்டபம் ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும். இவர் மைசூர் அரசர் கந்திரவநாத நாயக்கரை திண்டுக்கல்லில் தோற்கடித்தார். போர்க் களத்தில் பல வீரர்களுக்கு மூக்குகளும் உதடுகளும் அறுக்கப்பட்டன. அதனால் இப்போர் மூக்கறுப்பு போர் எனப்பட்டது. புகழ்பெற்ற சமஸ்கிருத மேதை நீலகண்ட தீக்க்ஷிதரை இவர் போற்றி ஆதரித்தார். இவர் காலத்தில் மதுரைக்கு வந்த இத்தாலிய கத்தோலிக்க பாதிரியார் ராபர்ட் - டி - நொபிலி, தமிழகத்தில் கிறித்துவ மதத்தைப் பரப்பினார்.

இராணி மங்கம்மாள்:

திருமலை நாயக்கருக்கு பிறகு ஆட்சி செய்த சிறந்த அரசி இராணிமங்கம்மாள் ஆவார். இவர் சொக்கநாத நாயக்கரின் மனைவியாவார். இவர் தமது மூன்று வயது பேரனான விஜயரங்க சொக்கநாதரின் பாதுகாவலராக ஆட்சி பொறுப்பேற்றார். இவர் மதுரை நாயக்க வம்சத்தின் முதல் பெண் அரசி ஆவார். இவர் சிறந்த நிர்வாகியும் வீரமிக்க தளபதியும் ஆவார். மதுரையிலுள்ள மங்கம்மாள் சத்திரம், இராணி மங்கம்மாளின் புகழுக்கும், கட்டடக்கலை சிறப்பிற்கும் ஒரு சிறந்த உதாரணமாகும். இவர் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். "உய்யக்கொண்டான் கால்வாய்" இன்றும் இவரது பெருமைகளை எடுத்து உரைக்கிறது.

மீனாட்சி (கி.பி.1732 - கி.பி.1739)

விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆண் வாரிசு இன்றி இறக்கவே, அவரது மனைவி மீனாட்சி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். மீனாட்சியே மதுரை நாயக்கர்களில் கடைசி ஆட்சியாளர் ஆவர். இவர் விஜயக்குமார நாயக்கர் என்பவரை தத்து எடுத்து அவருடைய பாதுகாவலராக தனது ஆட்சியை தொடங்கினார். தனது வளர்ப்பு மகனின் தந்தை பங்காரு இவருக்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபட்டு அரசாட்சியை கைப்பற்ற முனைந்தார். இதனையறிந்த மீனாட்சி, ஆற்காட்டில் இருந்த சந்தாசாகிப்பின் உதவியை நாடினார். இதற்காக ஒரு கோடி ரூபாயை தருவதாக ஒப்புக்கொண்டார். சந்தாசாகிப் மீனாட்சிக்கு எதிரான சதி திட்டத்தை முறியடித்தார். 

ஆனால் தனது உறுதி மொழியை மீறி, மதுரையை கைப்பற்றும் நோக்கில் மீனாட்சியை கைது செய்து அவரது சொந்த அரண்மனையிலேயே சிறைப்படுத்தினார். இதனால் மனமுடைந்த மீனாட்சி சிறையில் விஷம் அருந்தி உயிர் துறந்தார். இவரது காலத்தில் நாயக்கர்களுக்கு சொந்தமான தஞ்சை, திண்டுக்கல், திருச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளை ஆற்காடு நவாப்பு சந்தா சாகிப் கைப்பற்றினார். இவ்வாறாக நவாப்புகளால் மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தஞ்சை நாயக்கர்கள் செவப்ப நாயக்கர் (கி.பி.1532 - கி.பி.1560)

தஞ்சாவூர் விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது. திம்மப்ப நாயக்கர் தஞ்சாவூரின் பொறுப்பாளராக செயல்பட்டார். இவருக்குப் பின் இவரது மகன் செவப்ப நாயக்கரை தஞ்சாவூர் நாயக்கராக விஜயநகர அரசர் அச்சுதராயர் நியமித்தார். செவப்ப நாயக்கர் தஞ்சாவூரின் முதல் நாயக்கர் ஆவார். இவரே தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தவராவார். இவர் போர்த்துகீசியர்கள் நாகப்பட்டினத்தில் குடியேற அனுமதி வழங்கினார். இவர் சிவகங்கா ஏரியைப் புதுப்பித்தார். அது 'செவப்பனேரி' என பிறகு அழைக்கப்பட்டது.

அச்சுதப்ப நாயக்கர் (கி.பி.1560 - கி.பி.1600)

செவப்ப நாயக்கருக்குப்பின் அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் தஞ்சையில் ஆட்சி செய்தார். இவர் தலைக்கோட்டை போரில் விஜயநகர பேரரசுக்கு பெரும் உதவிபுரிந்தார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலை கட்டி முடித்தார். 

இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - கி.பி.1634)

அச்சுதப்ப நாயக்கரையடுத்து அவரது மகன் இரகுநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இரகுநாத நாயக்கரே தஞ்சை நாயக்க அரசர்களில் சிறந்தவர் ஆவார். செஞ்சி, மதுரை நாயக்கர்கள், யாழ்ப்பாணர் மற்றும் போர்ச்சுகீசியர்களை வென்று, அவர்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் கலைகளைப் போற்றினார். அறிஞர்களை ஆதரித்தார். தானே ஒரு சிறந்த கவிஞராக விளங்கினார். இவர் ருக்மணி பரிநயம், பாரி ஜாதம், புஷ்பகர்ணம், இராமாயணம் போன்ற நூல்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். 

விஜயராகவ நாயக்கர் (கி.பி.1634 - கி.பி.1673)

இரகுநாதரையடுத்து அவரது மகன் விஜயராகவ நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். விஜயராகவ நாயக்கர் தெலுங்கு மொழி அறிஞராவார். இவர் இரகுநாத பயுதம் என்ற நூலை எழுதினார். கி.பி.1673 - இல் மதுரை நாயக்கர் சொக்கநாதர் தஞ்சை மீது படையெடுத்து விஜயராகவ நாயக்கரை கொன்று, தமது உறவினர் அழகிரியை தஞ்சையின் ஆளுநராக நியமித்தார். இத்துடன் தஞ்சை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டதால் அவரது குடும்பம் தற்கொலை செய்துக் கொண்டது. அவரின் உயிர் பிழைத்த ஒரே வாரிசு நாயக்கராக வேண்டும் என நினைத்து பீஜப்பூர் சுல்தான், மராட்டிய தளபதி வெங்காஜியை அனுப்பி வைத்தார். ஆனால் வெங்காஜியோ கி.பி.1676 - இல் தஞ்சை மன்னராக பொறுப்பேற்று மராட்டியர் ஆட்சியை ஏற்படுத்தினார்.

செஞ்சி நாயக்கர்கள்:

பாலாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியான "செஞ்சி" நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. செஞ்சி நாயக்கர்கள், விஜய நகர அரச குடும்பத்தின் உறவினர்கள் ஆவர். இவர்களின் பூர்வீகம் வட இந்தியாவில் உள்ள மணிநாகபுரமாகும். இவர்கள் தென் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து இப்பகுதியில் குடியேறினர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் செஞ்சி தலைநகராக இருந்தது. கிருஷ்ணதேவராயர் வையப்பர் என்பவரை செஞ்சியின் முதல் நாயக்கராக நியமித்தார். இவர் கி.பி.1526 முதல் கி.பி.1541 வரை ஆட்சிபுரிந்தார்.

வையப்ப நாயக்கருக்கு பிறகு அவரது மகன் துப்பாக்கி (நாயக்கர்) கிருஷ்ணப்பர் கி.பி.1541 முதல் கி.பி.1554 வரை ஆட்சிப் புரிந்தார். இவர் வெல்லாற்றின் கரையில் கிருஷ்ணப்பட்டினம் என்ற நகரை நிறுவினார். மதசகிப்புத் தன்மை கொண்டவராக விளங்கிய இவர் கிறித்துவர்கள் திருச்சபைகளைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார். சித்தாமூரில் சமணர்களும், திண்டிவணத்தில் சைவ மதத்தினரும் கோயில்களை கட்டிக்கொள்ள அனுமதித்தார்.

இவருடைய தளபதி வேங்கடா, "சென்னை சாகரம்" என்ற ஏரியை வெட்டுவித்து விவசாயத்தை வளரச் செய்தார். கிருஷ்ணப்பநாயக்கருக்குப் பிறகு செஞ்சியின் பொறுப்பை ஏற்றவர்கள் திறமையற்றவர்கள். பீஜப்பூர் சுல்தான் கி.பி. 1648 - ஆம் ஆண்டு செஞ்சியை கைப்பற்ற தனது படைத் தளபதி மீர்சும்லா என்பவரை அனுப்பினார். இவர் செஞ்சியை கைப்பற்றி நாசிர்கான் என்பவரை பொறுப்பாளராக நியமனம் செய்தார்.

மராட்டிய மன்னன் சிவாஜி கி.பி. 1678 -இல் செஞ்சியைக் கைப்பற்றினார். அது முதல் கி.பி.1698 - வரை செஞ்சி மாராட்டியர் ஆட்சியின் கீழ் இருந்தது. சிவாஜிக்குப் பிறகு இராஜபுத்திர படை தளபதியான சொரூப்சிங் கட்டுப்பாட்டில் செஞ்சி இருந்தது. இவருக்குப் பிறகு இவரது மகன் இராஜா தேசிங்கு செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பேற்றார்.

ஆற்காட்டு நவாப் சாதக்துல்லாக்கான் செஞ்சி மீது படையெடுத்து ராஜாதேசிங்கை தோற்கடித்து கொன்றார். செஞ்சி ஆற்காட்டுடன் இணைக்கப்பட்டது. இராஜா தேசிங்கின் மனைவி சதி மேற்கொண்டு உயிர் துறந்தார். அவரது நினைவாக இராணிப்பேட்டை  நகரம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு செஞ்சியில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. கி.பி.1698 - இல் மொகலாயர்களுக்காக செஞ்சியைக் கைப்பற்றிய, மொகலாயத் தளபதி சுல்ஃபிகர்கான் செஞ்சியின் ஆட்சியாளரானார்.

வேலூர் நாயக்கர்கள்:

வேலூர் நாயக்கர் ஆட்சியானது சின்ன நாயக்கபொம்மர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. இவர்தான் முதல் வேலூர் நாயக்கராவார். இவருக்குப் பிறகு லிங்கம்ம நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். வேலூர் நாயக்கர்கள் சிறுதுகாலமே ஆட்சி செய்தனர். நாயக்கர்களின் ஆட்சி முறை நாயக்கர்கள் சிறந்த நிர்வாக முறையை ஏற்படுத்தினர். பேரரசு பல மாநிலங்களாகவும், மண்டலங்களாகவும், சீமைகளாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன. "பாளையப்பட்டு முறை" நடைமுறையில் இருந்தது. அரசின் முக்கிய வருவாய் நிலவரி ஆகும்.

சமூக பொருளாதார நிலை

நாயக்கர்கள் காலத்தில் சாதிமுறை கடுமையானதாக இருந்தது. வலங்கை, இடங்கை பிரிவுகள் இருந்தன. சமூகத்தில் கொத்தடிமை முறை இருந்தது. டச்சு நாட்டு வணிகர்கள் அடிமைச்சந்தைகளை ஆரம்பித்து மக்களை அதிகளவில் அடிமைப்படுத்தினர். தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டுக்கள் குடிபெயர்ந்து புதிய நில உரிமையாளர்களாக உருவெடுத்தனர். இராணி மங்கம்மாள் போன்ற சில நாயக்கர்கள் நீர்ப்பாசன முறையை அதிகரித்தனர்.

நாயக்கர்கள் இந்து சமயத்தைப் போற்றினர். இவர்கள் சைவ சமயத்தை ஆதரித்ததுடன், லிங்க வழிபாட்டு முறையையும் பின்பற்றினார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் தெப்பத்திருவிழா, தேர்த்திருவிழா, சித்திரைத்திருவிழா போன்ற விழாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

கலை, கட்டடக்கலை

ரகுநாத நாயக்கர் சங்கீத சுதா, பரதசுதா ஆகிய இரு இசைநூல்களை இயற்றியுள்ளார். இந்நூல்கள் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ராகங்களையும் தாளங்களையும் பற்றி விளக்குகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில், கிருஷ்ணாபுரத்திலுள்ள திருவேங்கடநாதர் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயில் போன்றவை நாயக்கர் கட்டடக்கலை வளர்ச்சிக்கு சிறந்த கால கலை, உதாரணங்களாகும்.

திருமலை நாயக்கர் மதுரையில் புது மண்டபம், மாரியம்மன் தெப்பக்குளம், நாயக்கர் மஹால் ஆகியவற்றை கட்டினார். தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை கோட்டை சேவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. செஞ்சியை ஆட்சி புரிந்த அச்சுத இராமபத்ர நாயக்கர் திருவண்ணாமலை கோவிலுக்கு சுற்றுசுவர்களையும், மாபெரும் கோபுரத்தையும் கட்டி முடித்தார்.

திருமலை நாயக்கர் மஹால்:

இத்தாலிய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இது திராவிட, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய கலை அம்சங்களை கொண்டுள்ளது. நாயக்கர் கால ஓவியங்களுள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரையப்பட்டுள்ள ஓவியம் மிகவும் சிறப்பானதாகும். திருமலை நாயக்கரின் சிதம்பர புராணம், பரஞ்ஜோதியாரின் சிதம்பர பட்டியல், ஹரிதாசரின் இருசமய விளக்கம், உமறுப்புலவரின் சீறாப்புராணம், குமரகுருபரின் கந்தர் கலிவெண்பா, திருவேங்கடம் எழுதிய மெய்ஞான விளக்கம் ஆகியவை இவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சிறந்த நூல்கள் ஆகும்.

Previous Post Next Post