விக்கிரமாதித்தனிடம் வேதாளம் புதிர் கதை கூறுதல் :
வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு, அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி, கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு சமயம் "கிஷநகர்" என்ற நாட்டை "ராஜேந்திரா" என்ற மன்னன் ஆண்டு வந்தான் வீரத்திலும், கொடை பண்புகளிலும் சிறந்தவனான அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்பமாக வாழ்ந்தனர்.
அம்மன்னனுக்கும், அவனது மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "சோனா" என்று பெயரிட்டு வளர்த்தனர். தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், தன் மகள் சோனாவிற்கு ஆண்கள் பயிலும் போர்கலையை நன்கு பயிற்றுவித்து, அவளை சிறந்த வீரமங்கையாக்கினான் மன்னன். சோனாவும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் தன்னுடன் போட்டியிட்ட பல ஆண் வீரர்களையே தோற்கடித்து புகழ் பெற்ற இளவரசியாக விளங்கினாள். சோனாவிற்கு திருமண வயது நெருங்கியதும் அவளுக்கு திருமணம் செய்விக்க ஏற்ற இளவரசனை தேடிக் கொண்டிருந்தார் ராஜேந்திரா.
இதையறிந்த சோனா, "தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இளவரசன் தன்னை வீரக்கலைப் போட்டிகளில் வென்றால் மட்டுமே, தான் அந்த இளவரசனை திருமணம் செய்து து கொள்வேன்" என்று நிபந்தனை விதித்தாள். இதைக் கேட்ட ராஜேந்திரா, தன் மந்திரிகளுடன் ஆலோசித்து சோனா கூறியபடி வீரக்கலை போட்டிகளை ஏற்பாடு செய்து, அதில் அனைத்து நாட்டு இளவரசர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த வீரக்கலைப் போட்டிகளில் கலந்து கொண்ட எல்லா நாட்டு இளவரசர்களுடனும் சண்டையிட்டு அவர்களை தோற்கடித்தாள் சோனா. அப்போது அப்போட்டியைக் காணும் கூட்டத்தில், மக்களோடு மக்களாக சோனா சண்டையிடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் "சந்தநகர்" நாட்டு இளவரசன் "உதயவர்மன்" தினமும் நடக்கும் போட்டிகளில் சோனா பிற நாட்டு இளவரசர்களுடன் சண்டையிடும் போது, அவள் கையாளும் சண்டை நுணுக்கத்தை நுட்பமாக கவனித்து கொண்டான். ஒரு சமயம் வேறொரு நாட்டு இளவரசனுக்கெதிராக சோனா கையாண்ட சண்டை நுணுக்கத்தை, தன்னையறியாமல் சத்தமாக கத்தி, சோனவை பாராட்டிவிட்டான் உதயவர்மன்.
தன் சண்டை நுணுக்கத்தை பாராட்டு பவர்கள் நிச்சயம் சாதாரண மனிதனாக இருக்க முடியாது என்று எண்ணி, தன்னை பாராட்டியவர் யார் என அக்கூட்டத்தில் தேடினாள் சோனா. ஆனால் அவளால், அக்குரலுக்குரிய மனிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது சந்தநகர் இளவரசனாகிய உதயவர்மனி, சோனாவுடன் சண்டையிடும் முறை வந்தது, இருவரும் வீரக்கலை போட்டி நடக்கும் மைதானத்தில் சண்டையிட துவங்கினர். இம்முறை சோனா, என்ன தான் கடினமாக முயன்றாலும், மற்ற நாட்டு இளவரசர்களை சுலபமாக தோற்கடித்தது போல உதயவர்மனை தோற்கடிக்க முடியாமல் திணறினாள்.
சீக்கிரத்திலேயே அப்போட்டியில் உதயவர்மனிடம் தோற்றாள் சோனா. அப்போது முந்தைய ஒரு போட்டியின் போது தன் சண்டை நுணுக்கத்தை பாராட்டிய மனிதன் உதயவர்மனாக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு எழுந்தது. அந்த எண்ணத்துடனே தன் தந்தையாகிய அரசன் ராஜேந்திராவிடம் சென்றாள் சோனா மன்னனிடம் தான் யார் என்று முறையாக அறிமுகப் படுத்திக்கொள்ள, மன்னரின் குடும்பம் இருக்கும் மேடைக்கு சென்றான் உதயவர்மன். அப்போது நீங்கள் தானே மற்றொரு நாள் எனது சண்டை நுணுக்கத்தை மக்கள் கூட்டத்தில் இருந்து பாராட்டியது என்ற தனது சந்தேகத்தை பற்றிக் கேட்டாள் சோனா.
அது தானே தான் என உதயுவர்மனும் உண்மையை ஒப்புக் கொண்டான். அப்போது சோனா, " தான் உதயவர்மனிடம் போட்டியில் தோற்றதை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் தன்னால் உதயவர்மனை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், அதற்கான காரணத்தை உதயவர்மனே யோசித்து தெரிந்து கொள்ளுமாறு" அவனிடம் கூறினாள். அதைக் கேட்டு சற்று நேரம் சிந்தித்த உதயவர்மன், சோனா சொல்வதில் நியாயம் இருப்பதாக கூறி அங்கிருந்து விடைபெற்றான்.
வேதாளம் கூறிய புதிர் கதையிலிருந்து விக்கிரமாதித்தனிடம் கேள்வியை கேட்டது வேதாளம்:
இருவரும் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன? என்று வேதாளம் விக்ரமாதித்தியனிடம் கேட்டது. அதற்கு விக்ரமாதித்யன் உதயவர்மன் மற்ற நாட்டு இளவரசர்களை போல எடுத்தவுடனே சோனாவுடன் போட்டியிடாமல், ஒரு மாணவன் தன் குருவிடம், அவர் செய்து காட்டும் வித்தைகளை முதலில் பார்த்து கற்றுக் கொள்வதைப் போல, சோனாவின் சண்டை நுணுக்கத்தை கவனித்து, அதற்கான மாற்று நுணுக்கத்தை அவளிடமே கற்றுக் கொண்டான். எனவே சோனா, உதயவர்மனுக்கு "மானசீக குருவாக" கருதப்பட இடமுண்டு. குரு சிஷ்ய உறவென்பது ஒரு புனிதமான பந்தம், எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்த புனித பந்தம் களங்கப்படும் என்று இருவரும் கருதியதால், இருவரும் பிரிந்தனர். இதில் இருவரின் நிலைப்பாடும் சரியே" என பதிலளித்தான்.