பாண்டியர்களின் தேற்றம் :
அன்றைய கால கட்டத்தில் பரந்திருந்த பாண்டியப் பேரரசானது இன்றைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதி மற்றும் திருவாங்கூரின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. மெகஸ்தனிஸ், பிளினி போன்ற கிரேக்க எழுத்தாளர்கள் நூல்களிலும், சமஸ்கிருத இலக்கண அறிஞர் கத்யாயணர் குறிப்புகளிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் யுவான் - சுவாங், மார்கோபோலோ, இஸ்லாமிய வரலாற்றாளர் வாசஃப் ஆகிய வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகளிலும் பாண்டியரின் வரலாற்றுச் செய்திகளைக் காணலாம். பாண்டியர்களின் வரலாற்று காலம் மூன்று காலக்கட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. அவை,
1. முற்காலப் பாண்டியர்கள்
2. முதலாம் பாண்டியப் பேரரசு
3. இரண்டாம் பாண்டியப் பேரரசு
முற்காலப் பாண்டியர்கள் :
முற்காலப் பாண்டியர்கள் தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்கள் அமைத்து பெருமை பெற்றவர்களாவர். பாண்டியர்களின் தலைநகரம் மதுரை ஆகும். அவர்களது இலச்சினை மீன் உருவமாகும். தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றியபோது முற்காலப் பாண்டியர் ஆட்சியானது முடிவுக்கு வந்தது.
முதலாம் பாண்டியப் பேரரசு :
கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் கடுங்கோன் கலப்பிரர்களை வென்று பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிறுவினார். இவர் ஏற்படுத்திய பேரரசு முதலாம் பாண்டியப் பேரரசு என்று அழைக்கப்பட்டது. கடுங்கோனுக்கு பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பட்டத்திற்கு வந்தார். இவருக்கு சடையவர்மன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இவரை உண்மையின் தோழன் " என்று செப்பேடுகள் கூறுகின்றன.
அடுத்து ஆட்சிக்கு வந்த செழியன்சேந்தன் 'வானவன்' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன் என்ற பட்டப் பெயர்களும் உண்டு. முதல் பாண்டியப் பேரரசின் தலைசிறந்த அரசனாகக் கருதப்படுபவர் மாறவர்மன் அரிகேசரி. பராங்குசன், நெய்வேலி வென்ற நெடுமாறான் ஆகியன இவரது பட்டப்பெயர்களாகும். மாறவர்மன் அரிகேசரி சைவ சமய வரலாற்றில் கூன்பாண்டியன் என்றும் நின்றசீர் நெடுமாறன் என்றும் அழைக்கப்பட்டார். முதலாம் பாண்டியப் பேரரசின் கடைசி அரசனான வீரபாண்டியன் (கி.பி. 946 - 966) ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டான். அத்துடன் முதலாம் பாண்டியப் பேரரசு முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாண்டியப் பேரரசு :
பல்லவர்கள் மற்றும் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி.1190 முதல் கி.பி. 1310 வரை தமிழகத்தை ஆண்ட பாண்டியர்கள் இரண்டாம் பாண்டியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இரண்டாம் பாண்டியர்களின் நிர்வாகத்தைக் குறித்தும், குலசேகரப் பாண்டியனைப் பற்றியும், வரி வசூல் முறை மற்றும் நில அளவை முறை பற்றியும் புதுக்கோட்டையிலுள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் கூறுகின்றன. திருவந்திபுரம் கல்வெட்டுகள் பாண்டியர்களின் போர் முறைகள் பற்றியும், ஸ்ரீரங்கம் கல்வெட்டுகள் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிகளைப் பற்றியும் கூறுகின்றன.
திருநெல்வேலி கல்வெட்டுகளில் பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களும் காணப்படுகின்றன. பாண்டிய மன்னர்களின் நிர்வாகம் மற்றும் போர் வெற்றிகள் குறித்து வேள்விக்குடி செப்பேடுகள், சீவரமங்கலம் செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள் மற்றும் சின்னமனூர் செப்பேடுகள் கூறுகின்றன. கி.பி.13 - ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல, சோழரின் தலைமையிலிருந்து விடுபட்டு தங்களது தனியரசை நிறுவினர். இந்நிலையில் விக்கிரம பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையில் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆதரவோடு விக்கிரம பாண்டியன் ஆட்சியைப் பிடித்தார்.
முதலாம் ஐடாவர்மன் குலசேகரன் (கி.பி.1190 கி.பி 1216)
முதலாம் ஜடாவர்ம குலசேகர பாண்டியன் தமது தந்தை விக்கிரம பாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார். இவரின் மெய்க்கீர்த்தி ஒரு சிறந்த வரலாற்றுச் சான்றாகும். இவர் 1030 பிரம்மதேயங்கள் அடங்கிய ராஜகம்பீர சதுர்வேதி மங்கலத்தை உருவாக்கியதால் "ராஜகம்பீரர்" எனும் பெயர் பெற்றார்.
முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் (கி.பி. 1216 - கி.பி. 1238)
இவர் ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் சகோதரர் ஆவார். இவர் கலியுக ராமன், அதிசயப் பாண்டிய தேவர் போன்ற பல பட்டப் பெயர்களைப் பெற்றிருந்தார். இவர் கி.பி .1219 - இல் மூன்றாம் குலோத்துங்க சோழனை போரிட்டு வென்றார். எனினும் ஹொய்சாளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார். இதனால் "சோனாடு கொண்டருளிய சுந்தரப் பாண்டியன்" என்று புகழப்பட்டார். இவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் "சோனாடு கொண்டான்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பிறகு இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் சில காலம் ஆட்சி புரிந்தார்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் (கி.பி. 1238 - கி.பி.1253)
இவர் சோழ மன்னன் மூன்றாம் இராஜேந்திரனைத் தோற்கடித்தார்.
முதலாம் ஐடாவர்மன் சுந்தரப் பாண்டியன் (கி.பி.1253 - கி.பி.1268)
இவர் ஈழம், கொங்கு நாடு, வல்லம் மற்றும் சோழ அரசுகளை வெற்றிக் கொண்டதால் திரிபுவன சக்கரவர்த்தி மற்றும் மும்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன் ஆகிய பட்டப்பெயர்களைப் பெற்றார். இவர் காலத்தில் பாண்டிய அரசு பாண்டியப் பேரரசாக மாறியது. இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கம் பொன் தகட்டால் கூரை வேய்ந்தார். இதனால் பொன்வேய்ந்த பெருமாள் எனும் பட்டம் பெற்றார். இவர் மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்.
முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1268 - கி.பி.1308)
இவர் முதலாம் ஜடாவர்மன் சுந்தரப்பாண்டியனின் மகனாவார். இவரது ஆட்சியின் போது தான் வெனிஸ் நாட்டுப் பயணி மார்கோபோலோ தமிழகம் வந்தார். இவர் சேர நாட்டிலுள்ள கொல்லம் என்ற பகுதியை வென்றதால் 'கொல்லம் கொண்ட பாண்டியன்' என்று பெயர் பெற்றார். இவர் இலங்கையின் மீது படையெடுத்து சுபகிரி கோட்டையில் இருந்த பெருஞ்செல்வத்தையும், நினைவுச் சின்னமான புத்தரின் பற்களையும் மதுரைக்கு கொண்டுவந்தார். இவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் சுற்றுச்சுவரைக் கட்டினார். இவருக்குப்பின் பட்டத்து இளவரசர்களுக்கிடையே ஏற்பட்ட வாரிசுரிமைப் போர் பாண்டிய அரசு மீது முஸ்லீம் அரசர்கள் படையெடுப்பதற்கு வழிவகுத்தது.
சங்க கால பாண்டியர்களின் ஆட்சி முறை :
பாண்டிய நாடு முழுவதும் பாண்டிய மண்டலம் எனப்பட்டது மண்டலமானது பல வளநாடுகளாகவும், வளநாடு பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டது. மன்னர் தமக்கு உதவியாக, அரையர்கள் எனப்பட்ட அமைச்சர்களையும், படைத்தளபதியையும் நியமித்துக் கொண்டார். வரியைப் பெறுவதற்கும் கணக்குகளை சரிபார்க்கவும் சிறப்பு அதிகாரிகளை பணியமர்த்தினார். அறநிலை, நீர்நிலை, நாணயம், வரித்தண்டல் மற்றும் நீதிவாரியங்கள் என்ற ஐந்து வாரியங்கள், ஒவ்வொரு கிராமத்தையும் நிர்வகித்தன.
வேளாண்மை மற்றும் வாணிபம் மக்களின் முக்கிய தொழில்களாக இருந்தன. வேளாண்தொழில் செய்வோர் 'பூமி புத்திரர்கள்' எனப்பட்டனர். அடிமைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டனர். பாண்டியநாடு முத்துக்குளிக்கும் தொழிலில் சிறந்து விளங்கியது. பாண்டிய நாட்டு முத்துக்கள் வெளிநாட்டு சந்தைகளில் விரும்பி வாங்கப்பட்டன. கொற்கை, தொண்டி ஆகியன சிறந்த துறைமுகங்களாக விளங்கின. திருவாசகம் மாணிக்க வாசகரால் எழுதப்பட்டது. ஆண்டாள் திருப்பாவையும், நம்மாழ்வார் திருப்பல்லாண்டையும், வில்லிபுத்தூரார் மகாபாரதத்தையும், அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்.
சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரிஉலா ஆகி நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார். கோயில் கட்டக் கலையில் கருவறை, விமானம், பிரகாரம், கோபுரம் ஆகிய கட்டுமானப் பணிகளில் பாண்டியர்களின் கலைப்பாங்கு தனித்துவம் பெற்றது. பாண்டியர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகியவற்றைக் கூறலாம்.
கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுமானக் கோயில்கள் பாண்டியர் காலத்தவையாகும். குலசேகர பாண்டியன் என்ற மன்னன் தனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள எல்லா கோயில்களிலும், அர்த்த மண்டபம், மணி மண்டபம், சன்னதிகள் ஆகியவற்றை கட்டித்தந்துள்ளார். கற்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் 'கற்றளிகள்' எனப்பட்டன.
இவை கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற மூன்று முக்கியப் பிரிவுகளாக் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்கள், பிரகாரங்கள், விமானங்கள், கற்ப கிரகங்கள் போன்றவை பாண்டியர் கால கோயில் மற்றும் கட்டடக்கலையின் தனிச்சிறப்புக்களாகும். மதுரை மீனாட்சி கோயிலும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலும் பாண்டியர்கால கட்டடக்கலையின் மிக உன்னத நிலையினை எடுத்துக்காட்டுகின்றன. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்து சுவரோவியத்தை, சித்தன்னவாசல் குடைவரையில் காணலாம்.
அதில் வரையப்பட்டுள்ள தாமரைப் பூக்கள், துள்ளும் மீன்கள், நீராடும் யானைகள் போன்ற ஓவியங்கள் அழகு வாய்ந்தவை. பாண்டியரது சிற்பங்களை கழுகுமலை, திருப்பரங்குன்றம், திருமலைபுரம், நார்த்தாமலை, குன்றக்குடி ஆகிய இடங்களில் காணலாம். பாண்டிய அரண்மனையில் நக்கீரர் முதன்மை தமிழ்ப்புலவராக விளங்கினார். மதுரை மாநகரம் தமிழ்க்கூடல் என்று போற்றப்பட்டது.
பாண்டியர்கள் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் போற்றி வளர்த்தனர். உயர்கல்வி நிறுவனங்கள் சாலைகள் என்று அழைக்கப்பட்டன. திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் மாறவர்மன் அரிகேசரியின் சமகாலத்தவர் ஆவார். தென்காசியை ஆண்டுவந்த பாண்டிய மன்னன் அதி வீரராம பாண்டியன் நைடதம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
பாண்டியப் பேரரசின் வீழ்ச்சி :
முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களான சுந்தர பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையில் ஏற்பட்ட அரசுரிமைப் போரில் பாண்டியநாடு பிளவுபட்டது. சுந்தரபாண்டியன், டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். சுந்தர பாண்டியனின் கோரிக்கையை ஏற்று கி.பி.1311 - இல் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் தமிழகத்தின் மீது படையெடுத்து சுந்தர பாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத் தந்தார்.
கில்ஜிமரபினருக்குப்பின் வந்த துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவிலும் விரிவு படுத்தினார்கள். பாண்டிய பேரரசை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். பின்னர் துக்ளக் மரபினர் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் மதுரை சுல்தான்கள் தனியே மதுரையை ஆளத் தொடங்கினார்கள். மதுரை சுல்தான்களின் எழுச்சியினால் முழுமையாக பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.