ரத்த ஓட்டத்தின் அறிமுகம்:
இன்று நமது உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்து இருக்கிறோம். இதற்கு மையமாக இருப்பது இதயம். அதிலிருந்து செல்லும் இரத்தம்.. எத்தனை தமனிகள் மூலம் செல்கிறது? அது செல்லும்போது இதயம் எத்தனை முறை துடிக்கிறது? அது உடல் முழுவதும் பரவி என்னன்ன பணிகளை செய்கிறது?
என்பதையெல்லாம் மூன்றாம் வகுப்பு மாணவனே தெளிவாக கூறுவான். - ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித அறிவியல் ஆக்கமும் இல்லாத காலத்தில் இதயம் இரத்தம் இரண்டையும் பற்றி சரியான வரையறையைக் கூற முடியுமா? " ரத்தம் நுரையீரலில் இருந்துதான் செல்கிறது" என்றார் ஒருவர். ரத்தம் மூளையில் தோன்றுகிறது" என்றார் மற்றொருவர். "ரத்தம்.... இதயத்திற்கு வெளியே உருவாகிறது" என்றார் பிறறெருவர்.
இளமைப் பருவம்:
இப்படி இரத்தச் சுழற்சியைப் பற்றி ஆளாளுக்கு தோன்றியதை கூறிக் கொண்டிருந்த காலகட்டத்தில்' இதயம் இரத்தம் இவைகளை பற்றி சரியான முறையில் கூறியவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி ஆவார். உடலியலில் புதிய மறுமலர்ச்சியையும், புரட்சியையும் தோற்றுவித்த இவர் தாமஸ் ஹார்வி என்பவருக்கு மகனாய் 1578 - ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் தேதி இங்கிலாந்திலுள்ள 'போக்ஸ்டன்' மாகாணத்தில் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பை உள்ளூரில் புகழ்பெற்ற பள்ளியில் படித்தார். அங்கு அவர் சாதாரணமான மாணவராகத் திகழ்ந்தார்.
உயர்நிலைப் பள்ளியின்போது அவருக்கு மருத்துவ படிப்பின்போது தீராத மோகம் ஏற்பட்டது. கேம்பிரிட்ஜில் மருத்துவம் படித்து தேறினார். ஒரு மருத்துவராக ஒரு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவர் மனித உடல் பற்றி ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக 'இரத்தம்' பற்றிய ஆய்வே அவரை ஈர்த்தது. அதைப்பற்றி தன் முன்னோர்கள் எழுதியதை படித்துப் பார்த்தார்.
அதில் பல வித்தியாசமான அனுபவ கருத்துகளை அறிந்து கொண்டார். சிறு சிறு பூச்சிகளிலிருந்து... சிறு சிறு உயிரினங்கள ... சிறு மிருகங்களை பிடித்து ஆராய்ந்தார். மற்றும் தன்னிடம் வரும் நோயாளிகளின் மார்பில் கை வைத்து பார்ப்பார். காது வைத்து இதயத்துடிப்புகளை கேட்பார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆய்வின்படி மனித உடலில் இரத்தமானது வட்ட வடிவமான பாதையில் ஓடுகிறது.
வில்லியம் ஹார்வி கண்டுபிடிப்பு:
குறிப்பாக அது இதயத்தின் வழியாக உடலின் பல பகுதிகளுக்கு சென்று வருகின்றது என்று முதன்முதலாக கூறினார். தன் கண்டுபிடிப்பை 1616 - ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார் . வழக்கம்போல மூட பழக்க வழக்கமுள்ளவர்களும் , மதவாதிகளும் - அவரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதயத்துடிப்பைப் பற்றியும் இவர்தான் முதன் முதலில் கூறினார்.
அதாவது இதயமானது ஒவ்வொரு முறையும் துடிக்கும்போது இரு அவுன்ஸ் இரத்தம் வெளியேறுகிறது அல்லது இதயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. மேலும் இதயமானது நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. இந்த துடிப்பால் ஒரு நாளைக்கு 5700 லிட்டர் ரத்தம் அதன் ஊடாக செல்கிறது என்பதை அறுதியிட்டுக் கூறினார்.
இதுமட்டுமின்றி அன்றைய உண்மை ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களும், இன்றைய மருத்துவ விஞ்ஞானிகளும் வியக்கும் வண்ணம் இதயத்தின் படம் வரைந்து அதிலிருந்து செல்லும் இரத்த தமனிகளில் இரத்தம் செல்லும் வழிகளையும் படமாக போட்டு (அன்றே) சரியான முறையில் விளக்கி இருந்தார் என்பது ஆச்சர்யம். ஆரம்பத்தில் இவரின் ஆய்வுக்கருத்தை எதிர்த்தவர்கள் பின்னர், ஹார்வியின் இதயம் பற்றிய கருத்தே உண்மை என்று ஒப்புக் கொண்டனர்.
வில்லியம் ஹார்வி மறைவு :
மருத்துவ உலகிற்கு புதிய ஜன்னலை திறந்து வைத்த அவரின் புகழ் பல நாடுகளுக்குப் பரவியது. முதலாம் சார்லஸ் மன்னரின் ஆஸ்தான மருத்துவராய் அவர் நியமிக்கப்பட்டார் என்பது அவரின் நேர்மையான உழைப்பின் கிரீடம். அரண்மனையில் இருப்பினும் தன் உடல் கூற்று ஆய்வை அவர் கைவிடவில்லை. 'எலிசபெத் பிரையன்' என்பவரை மணந்து நல்வாழ்வு வாழ்ந்தார்.
மனித உடல் ஆய்விலேயே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மேதையான வில்லியம் ஹார்வி தனது 79 - ஆம் வயதில் 1657 - ஆம் ஆண்டு, ஜூன் 3 - ம் நாள் தன் ரத்த ஓட்டத்தை நிறுத்தினார். ஆனால் இதய ஓட்டம் என்றாலே ஹார்வி என்பதை எவராலும் மறக்க முடியாது; மறுக்கவும் இயலாது.