வானியல் அறிமுகம்:
இன்றைக்கு வானியல் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது ; சூரியன் உட்பட அனைத்து கிரகங்களையும் செயற்கைக் கோள்களைக் கொண்டு ஆராய்வதோடு நிலவு, செவ்வாய் கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்பி அங்கு ஆய்வை மேற்கொள்கின்றனர். இந்திய நாட்டு அறிவியல் ஆக்க நிறுவனமான இஸ்ரோ ( Indian Space Research Organisation ) சூரியனுக்கு செயற்கைக்கோளை அனுப்ப முடிவு செய்துள்ளது. அமெரிக்கா ' நாசா ' அறிவியல் நிறுவனம் சூரியனை செயற்கைக் கோள்களைக் கொண்டு கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் அறிவியல் முன்னேற்றத்தில் போட்டி போட்டு வருகிறது.
' நிலா ' நிலா வாவா ! என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கையில் அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் நிலவுக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வந்துவிட்டனர். இன்றைக்கு அறிவியலுக்கு குறுக்கே எந்த மதமும் எதையும் பேசுவதில்லை. ஆனால்... 500 வருடங்களுக்கு முன்னர் அறிவியல் அறிஞர்களை எந்த நாடும் இன்றுபோல் போற்றியதில்லை. மதவாதிகள் என்ன சொல்கிறார்களோ அதுதான் விஞ்ஞானம் என்று பின்பற்றப்பட்டது.
'சூரியன் கடவுள்' என்றனர் மதவாதிகள். அது கடவுள் இல்லை. அது நெருப்பை உமிழ்கிற கிரகம் என்று எவராவது சொன்னால் அவர் கழுத்து தலையில் இருக்காது. இதை புருனோ என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையில் பின்பற்றினர் மதவாதிகள். தான் சொன்னது உண்மையல்ல என்று மன்னிப்பு கோரியதால் 'கலிலியோ' உயிர் பிழைத்தார். ஆனால் இவரோ தான் சொன்னது உண்மை... உண்மையைத்தவிர வேறில்லை என்றதால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன? கலிலியோ சொன்னதைதான் இவரும் கூறினார். இவர் கலிலியோவுக்கு முன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்.
இருவரும் இத்தாலியில் பிறந்தவர்கள் என்பது பெரும் ஒற்றுமை. பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சூரியன் கோடிக்கணக்கான நட்சத்திரத்தைப்போல ஒரு நட்சத்திரமே... மேலும் வானிலுள்ள கிரகங்களில் நம்மைப்போல மனிதர்கள் வாழலாம். இதைத்தான் அவர் அறிவியல் கண் கொண்டு கூறினார். வந்ததே கோபம் மதவாதிகளுக்கு . சூரியக் கடவுளை நட்சத்திரம் - நெருப்பு என அவமதித்து விட்டார் என்று போப் முன் நிறுத்தினர். அங்கே என்ன நடந்தது? அதற்கு முன் அவரின் சிறு வரலாறு.
இளமைப் பருவம்:
வானவியல் விஞ்ஞானி என கூறப்பட்ட பிலிப்போ ஜியார்டானோ புருனோ' என்பவர் இத்தாலியில் நோலா என்ற நகரத்தில் குளோவானி புருனோபுரோ லிஸ்ஸாசாவாலினோ தம்பதிகளுக்கு 1548 - ஆம் ஆண்டு பிறந்தார். (கலிலியோ பிறந்தது 1564) அவரின் தந்தை படை வீரராக பணியாற்றி வந்தார். மகனை செயிண்ட் டொமினிகோ என்ற மதப்பள்ளியில் சேர்த்து விட்டனர். அங்கு மதம் பற்றி படித்து, தன் 24 - ம் வயதில் பாதிரியாராக பணி புரிய ஆரம்பித்தார். 'கடவுள்' என்ற பெயரில் மதவாதிகள் மக்களை மூடநம்பிக்கையில் சீரழித்துக் கொண்டிருப்பதை அறிந்தார்.
'அறிவியல் சிந்தனை' என்ற ஒன்று அன்று மக்களை மறக்கடிக்க வைத்திருந்தது மதவாதிகளால். புருனோவுக்கு மதத்தின் பெயரால் 'அறிவியல்' ஒதுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மனவேதனை அடைந்தார். அவர் அறிவியல் சம்பந்தமான நூல்களை குறிப்பாக 'விண்ணியல்' நூல்களை நிறைய புடித்தார். மக்களுக்கு அறிவியலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். சந்திரன் போன்றவைகள் கிரகங்கள் சூரியன் அவைகள் கடவுள்கள் அல்ல என்றார்.
ஜியார்டானோ புருனோ கண்டுபிடிப்பு:
நமது பூமியானது மற்ற கிரகங்களோடு சூரியனை சுற்றி வருகின்றன. இதனால் இரவு, பகல் உண்டாகிறது என்றார். 'உலகம்' கடவுளால் உண்டானது அல்ல. நெருப்பு, நீர், நிலம், காற்று இவைகளால்தான் உண்டானது என்றார். 'மக்களே... உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக, அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார். புருனோவின் சீர்திருத்த முற்போக்கான அறிவியல் சிந்தனைகளை கேட்டு மதவாதிகள் கொதித்தனர்.
புருனோ... கடவுளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மக்களை முட்டாளாக்குகிறார் என்று அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். புருனோ மதவாதிகளை பற்றி கவலைப்படாமல் 'விண்ணியல்' ஆய்வை தொடர்ந்து செய்து வந்தார். தனது ஆய்வு முடிவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1592 - ஆம் ஆண்டு மதவாதிகள் அவரை மத துரோகம் செய்கிறார் என்று கைது செய்து கத்தோலிக்க தலைவர் முன் போப் (மூன்றாம் கிளமெண்ட் ) நிறுத்தினர்.
அவருக்கு ஆறாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1598 - ம் ஆண்டு விடுதலை ஆன பிறகும் கூட அவர் அறிவியலின் மகத்துவத்தை மக்களிடையே பரப்ப... ஆத்திரம் அடைந்த மதவாதிகள் 1600 ஆண்டு , பிப்ரவரி 17 - ம் நாள் அவரை எரித்துக் கொன்றனர். அப்போது அவரின் வயது 52 மட்டுமே. மக்களிடையே அறிவியல் சிந்தனை வளர வேண்டும் என்று போதித்த அவருக்கு கிடைத்த பரிசு கொடூரமானது. காலம் செல்ல செல்ல புருனோவின் ‘விண்ணியல்' சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஜியார்டானோ புருனோ மறைவு :
'புருனோ'வை கொன்ற மதவாதிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். புருனோவின் கருத்துக்களில் உண்மையிருப்பதை உணர்ந்த மக்களும், சில விஞ்ஞானிகளும் 1607 - ஆம் ஆண்டு 'நோலா'வில் அவருக்கு சிலை எழுப்பி மரியாதை செலுத்தினர். அதுமட்டுமின்றி சந்திரனில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றுக்கு அவரின் பெயரை வைத்து கௌரவித்தனர்.
இந்த நவீன காலத்திலும் சில மதவாத கூட்டம் அறிவியல் சிந்தனைகளை ஏற்க மறுத்து எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் அறிவியல் சிந்தனைகளும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் உலகில் மாபெரும் உயர்வுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அதற்காக தன் உயிரை நீத்த 'புருனோ'வை நாளும் நினைப்போமாக.