செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன்:
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
இளமைப் பருவம் :
வ.உ.சி.1872 - ஆம் ஆண்டு செப்டம்பர் 5 - ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியார் அவருக்கு சிவபுராணக்கதைகளைக் கூறுவார்.
அவரது பாட்டனாரிடம் இருந்து அவர் இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார். அரசாங்க அலுவலரான திரு.கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார்.
Also Read : வாஞ்சிநாதன் வாழ்க்கை வரலாறு!!!
அவருக்கு பதினான்கு வயதாகும் போது அவர் ஓட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குக் கல்வி கற்பதற்காக வந்தார். அவர் புனித சேவியர் பள்ளியிலும் கால்டுவெல் பள்ளியிலும் கல்வி கற்றார். திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.
வழக்கறிஞர் தொழில் :
வ.உ.சி.சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். திரு.கணபதி ஐயர் திரு.ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர் அவர் சட்டத் தேர்வை 1894 - ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895 ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார்.
அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை.வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார்.
சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார். வ.உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.
கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம் - 1906 :
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார்.
"பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.
வ.உ.சி. 1906 - ஆம் ஆண்டு அக்டோபர் 16 - ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். ( அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர் சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார் ). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000.ரூ .25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம்.
4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட் 8000 பங்குகளுக்காக ரூ .2,00,000 கொடுத்தார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை.
Also Read : தமிழகத்தின் வரலாறு!!!
ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார். ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார்.
அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்" என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார்.
"எஸ்.எஸ் . காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எஸ் வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று "எஸ் . எஸ் . லாவோ” என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர்.
வ.உ.சிதம்பரனார் கைது :
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலுாட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள். வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பின் சந்திரபால் 1908 - ஆம் ஆண்டு மார்ச் 9 - ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார். அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார்.
வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமணிய சிவாவுடன் சென்றார்.
Also Read : கேப்டன் இலட்சுமி சாகல் வாழ்க்கை வரலாறு!!!
வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது. இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908 - ஆம் ஆண்டு மார்ச் 12 - ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.
செக்கிழுத்த செம்மல் :
சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நுாற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார் மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
வ.உ.சி.சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது.
அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார் ? 1912 - ஆம் ஆண்டு டிசம்பர் 24 - ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும்.
ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம்.
Also Read : செண்பகராமன் பிள்ளை வாழ்க்கை வரலாறு!!!