இளமைப்பருவம் : -
இலட்சுமி சாகல் அல்லது இலட்சுமி சேகல் என்பவர் 1943 ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர்.
நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர். இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார்.
2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் ஜூலை 23 , 2012 அன்று மாரடைப்பால் இறந்தார். இராணி மேரி கல்லூரியில் பயிலும் போது கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினரானார். இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய ப.ராமமூர்த்தி தலைவராக இருந்தார். ஒருமுறை லட்சுமி பகத்சிங் வழக்குக்குக் கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு
அதே 1930 - ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார் . அக்காலத்தில் "கவிக்குயில்" என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன்பிறந்தவரான சுகாசினி நம்பியார், மீரட்டுச் சதிவழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார்.
பொதுவுடைமைவாதியான அவரிடமிருந்து லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் உருசியப் புரட்சி பற்றியும் பல நூல்களை வாங்கிப் படித்தார். சமுதாய மாற்றம் புரட்சியினால் தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பலானார். எனவே தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த லட்சுமி மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்.
1939-40 - களில் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும் அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரித்தானியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணி செய்ய லட்சுமியின் மனது இசையவில்லை. இந்திய சுதந்திர லீகின் அழைப்பின் பேரில் 1943 - ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார்.
அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். மறுநாள் நேதாஜியுடன் இரவு உணவு உண்ண லட்சுமிக்கு அழைப்பு வந்தது.
இப்படைக்குத் தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்துச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார். உங்கள் சேலை உடையும், நீண்ட கூந்தலையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் நினைவுறுத்தினார். தனது நட்பு, பாசம் ஆகிய தொடர்புகளை விட்டு, நாட்டுக்காகத் தமக்குத் தாமே என்ற உறுதி கொண்டார்.
1945 ஜூலை முதல் நாள் படையினருடைய வேதனைகளையும் நோவையும் ஆற்ற சிகிச்சை தேவை என உணர்ந்த லட்சுமி அங்கு ஷா எஸ்டேட் என்ற இடத்தில் இந்திய தேசிய இராணுவத்தினரும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருந்த ஒர் மருத்துவமனையில் அவர்களுக்கு . சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி லட்சுமியைத் தன்னுடன் திரும்ப வந்துவிடும்படி அழைத்தார்.
ஆனால் லட்சுமி பிடிவாதமாக மறுத்துவிட்டார். கூட மருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அன்றிரவே அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. விமானத்தைப் பார்த்ததும் பதுங்குகுழியில் மறைந்ததால் லட்சுமி உயிர்தப்பினார்.
தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். படைத் தளபதி லட்சுமி போர்க்கைதியாக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார்.
பிரித்தானிய இராணுவத்தினரால் லட்சுமியை எந்தப் பிரிவில் குற்றம் சாட்டுவது என முடிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தில் இருந்துவந்த அதிகாரியாகவோ, பர்மியராகவோ இல்லை, இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமாக அமைச்சராக இருந்தவர். எனவே சிறிது காலம் ரங்கூனில் ஆங்கிலோ - பர்மியர் வசிக்கும் பகுதியில் அவரை விட்டு வைத்தனர். அங்கு தனது நண்பரான கியான்புரி என்ற பெண் மருத்துவருடன் சிகிச்சையகம் சென்று காலம் கழித்தார்.
எனினும் இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. 1945 - ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில் ''இன்னும் போர் முடிவடையவில்லை நாம் இந்தியாவுக்குள் அடிவைத்து விடுதலை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம் .." என்று இந்தியில் முழங்கினார்.
இச்செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியைக் கைது செய்து "கலாப்" என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல்நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.