விக்கிரமாதித்தனிடம் வேதாளம் புதிர் கதை கூறுதல்
மரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து விக்ரமாதித்தியன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வேதாளம் மீண்டும் ஒரு கதை சொல்ல தொடங்கியது. இதோ அந்த கதை என்று வேதாளம் கூறியது. "அவந்திபுரம்" என்ற நாட்டை "சூரசேணன்" என்ற மன்னன் ஆண்டு வந்தான் அவருக்கு "வஜ்ரசேனன்" விக்ரமசேனன்" என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர் முதுமை அடைந்த பின் தன் மூத்த மகன் வஜ்ரசேனனை அரசனாக்கி விட்டு சூரசேனன், தன் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலானார். வஜ்ரசேனனும் சில காலம் வரை நன்கு ஆட்சி புரிந்தான்.
ஆனால் சில காலங்களிலேயே அவன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அரசு நிர்வாகத்தை கவனிக்காமல் எந்நேரமும் அந்தப்புரத்தில் நேரம் கழித்து வந்தான். இதனால் கவலையடைந்த அந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட மக்களும், மந்திரி பிரதானிகளும் நேராக அம்மன்னனின் தம்பியான விக்ரமசேனனிடம் சென்று அவர் அண்ணன் வஜ்ரசேனனுக்கு பதிலாக அவர் அரசனாகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதற்கு விக்ரமசேனன் தன் அண்ணனின் பதவியை தான் அவர்கள் பறித்துக் கொள்வது முறையாகாது என கோரிக்கையை மறுத்தான்.
இதை கேட்ட அவர்கள் பின்பு நேராக காட்டில் தவ வாழ்க்கை மேற்கொள்ளும் அவர்களின் தந்தையான சூரசேனனிடம் சென்று, அவரை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். அதற்கு அவர் தான் அரசபதவியை துறந்து தவ வாழ்க்கையை மேற்கொள்வதால், மீண்டும் அரசனாவது முறையாகாது என்று அவரும் மறுத்து அவர்களை வழியனுப்பினார். அவர்கள் சென்றதும் தனது குல குருவிடம் சென்று தன் நாடு மற்றும் தன் மகன், தன் மக்களின் நிலைகுறித்து அவரிடம் கூறி வருத்தமடைந்தார் சூரசேன்ன். இதைக் கேட்ட அந்த குரு, இப்பிரச்சனையை தான் தீர்த்து வைப்பதாக கூறி நேராக அவர் மகன் இருக்கும் அரண்மனையை நோக்கி சென்றார்.
அரண்மனையில் வீற்றிருந்த வஜ்ரசேனன், தனது குலகுரு அரண்மனைக்குள் வருவதைக்கண்டு தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்து சென்று அவரை வரவேற்று, உரிய ஆசனத்தில் அமர்த்தி, அவரை உபசரித்தான். இதெல்லாம் முடிந்தபின்பு அந்த குல குரு, வஜ்ரசேனன் சிறுவயதில் தன்னிடம் கல்வி பயின்றபோது அப்போது அவனிடம் தாம் குருதட்சிணை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், அதை இப்போது தாம் வஜ்ரசேனனிடம் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், தான் கேட்கும் தட்சிணை எதுவாக இருந்தாலும் அதை மறுக்காமல் தரவேண்டும் என வஜ்ரசேனனிடம் கூறினார்.
அதற்கு வஜ்ரசேனன் அந்த குலகுரு கேட்கும் எத்தகைய தட்சிணையையும் தாம் அளிப்பதாக உறுதியளித்தான். இதைக் கேட்ட அந்த குல குரு வஜ்ரசேனனிடம் அவனது நாட்டையே தனக்கு தட்சிணையாக அளித்துவிடுமாறு கூறினார். இதை கேட்டு முதலில் சற்று திடுக்கிட்டாலும், குருவிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அந்த குருவை தன் சிம்மாசனத்தில் நிறுத்தி, தான் கீழிறங்கி தன் குருவிற்கு தான் வாக்களித்தவாறே தன் நாட்டையே தட்சிணையாக கொடுத்துவிட்டான்.
வஜ்ரசேனனின் இந்த செயலைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார் அந்த குலகுரு. உடனே சூரசேனனை அரண்மணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் அந்த குலகுரு. சூரசேனனும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது அந்த குலகுரு வஜ்ரசேனன் தனக்கு தானமாக அளித்த ராஜ்ஜியத்தை, தான் மீண்டும் சூரசேனனுக்கு அளித்து அவரை மீண்டும் அரசனாக்கு வதாகவும், பிறகு இந்த நாட்டின் ராஜ்ஜிய நிர்வாகத்தை வஜ்ரசேனனுக்கும் அவன் தம்பி விக்ரமசேனனுக்கும் சரிபாதியாக பிரித்து அளிக்கும் படி அவரை பணித்தார் அந்த குலகுரு.
விக்ரமாதித்தியா நாட்டை சரியாக நிர்வகிக்காத வஜ்ரசேனனுக்கு மீண்டும் ராஜ்ஜிய நிர்வாகத்தை தர அந்த குலகுரு ஏன் கூறினார்? மேலும் பல தர்மநெறி காரணங்களைக் கூறி முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்த வஜ்ரசேனனின் தந்தை சூரசேனன் மற்றும் வஜ்ரசேனனின் தம்பி விக்ரமசேனன்.
விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கூறிய புதிர் கதையிலிருந்து கேள்வி ஒன்றை கேட்டது
இப்போது மட்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அது முறையானதாகுமா ? இதற்கு நீ சரியான பதிலைக் கூறு என அந்த வேதாளம் சொன்னது . " வஜ்ரசேனன் ஆட்சிப் பொறுப்பில் சில தவறுகள் செய்திருந்தாலும் அவன் குணத்தில் நல்லவன் . எனவே தான் அந்த குலகுரு தட்சணையாக தன் நாட்டையே கேட்ட போது அதை அவருக்கு உடனே கொடுத்தான் . அதனால் அவனை மீண்டும் நிர்வாகப் பொறுப்பில் ஈடுபடுத்துவதில் தவறில்லை .
அதேபோல் பல தர்ம ரீதியான காரணங்களுக்காக சூரசேனனும் , அவனது இரண்டாவது மகன் விக்ரமசேனனும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்தாலும் , இப்போது தங்களின் குலகுரு தங்களுக்கு அறிவுறுத்துவதாலும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நன்மையைக் கருதி அவர்கள் இருவரும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதில் தவறேதுமில்லை என்று விக்கிரமாதித்யன் பதிலளித்த உடனேயே அந்த வேதாளம் அவனிடம் இருந்து பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.